தேசிய செய்திகள்

தென் இந்தியாவில் பா.ஜனதா கூட்டணியை இழக்கிறது? தெலுங்கு தேசம் வெளியேற வாய்ப்பு

பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக சிவசேனா வெளியேறியதை அடுத்து தெலுங்கு தேசமும் அவ்வழியில் பயணிக்க உள்ளது. #TDP #BJP #ChandrababuNaidu

தினத்தந்தி

ஐதராபாத்,

மத்திய, மராட்டிய அரசில் பங்கு பெற்று உள்ள சிவசேனா, 2019 பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்து உள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவையில் தேர்தலில் தனித்து போட்டியிடுவது என சிவசேனா தேசிய செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பா.ஜனதாவை நேரடியாகவே விமர்சனம் செய்துவந்த சிவசேனா இந்த முடிவை அறிவித்து உள்ளது.

இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான தெலுங்கு தேசமும் வெளியேற வாய்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டு உள்ள அமராவதியில் கொண்டாட்டத்தின் போது பாரதீய ஜனதா மற்றும் தெலுங்கு தேசம் தலைவர்கள் இடையே வார்த்தை வாதம் நேரிட்டது. தெலுங்கு தேசம் உதவியால் மட்டுமே பாரதீய ஜனதா 4 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது என பாரதீய ஜனதாவிற்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் பதிலடியை கொடுத்தார்கள்.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் விசாகப்பட்டிணம் பா.ஜனதாவின் தாக்கம் காணப்படுவதாக பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் பொது பிரதமர் மோடியின் புகைப்படங்கள் விளம்பரங்களில் வெளியிடப்படவில்லை என பா.ஜனதாவினர் தரப்பில் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டது. தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. கனேஷ் அப்போது பேசுகையில், கூட்டணி பற்றி எதுவும் பேச வேண்டாம் என தலைவர் கூறிஉள்ளார் என குறிப்பிட்டார். அப்போதே இருகட்சியின் இடையே பிளவு என செய்திகள் வெளியாகியது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் 2019-ல் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் முதல்கட்சியாக தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளது என செய்திகள் வெளியாகியது.

புதியதாக உருவான தெலுங்கானாவிலும் தெலுங்குதேசம் உதவியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாரதீய ஜனதாவிற்கு 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநில பா.ஜனதா தலைவர் கே. லட்சுமணன் பேசுகையில், நாங்கள் கூட்டணி வைக்கப்போவது கிடையாது. தெலுங்கானாவில் இனி நடைபெற உள்ள தேர்தல்களில் தனித்தே போட்டியிட உள்ளோம், ஆட்சியை பிடிப்போம், என கூறியிருந்தார். பாரதீய ஜனதாவின் கூட்டணி எதுவும் இன்றி நம்மால் தன்னிச்சையாக வெற்றிபெற முடியும் என்பதில் தெலுங்கு தேசம் ஸ்திரமாக உள்ளது என பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், நாங்கள் நட்பு தர்மத்தை பாரதீய ஜனதாவுடன் பின்பற்றி வருகிறோம், பாரதீய ஜனதா கூட்டணியை தொடர விரும்பவில்லை என்றால் நாங்கள் தன்னிச்சையாக செல்வோம்,என கூறிஉள்ளார்.

தென் இந்தியாவில் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியில் முக்கிய கட்சியாக தெலுங்கு தேசம் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனித்து போட்டியிடுவோம் என தெலுங்கானா பாரதீய ஜனதா தலைவர் பேசிஉள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்களும் கூட்டணியை விரும்பவில்லை என பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தென் இந்தியாவில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சியை இழக்கலாம் என கூறப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்