தேசிய செய்திகள்

டெல்லி ஆஸ்பத்திரியில் நர்சுகள் மலையாளத்தில் பேச விதிக்கப்பட்ட தடை வாபஸ்

டெல்லி ஆஸ்பத்திரியில் நர்சுகள் மலையாளத்தில் பேச விதிக்கப்பட்ட தடை, எதிர்ப்பால் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி மாநில அரசு சார்பில் ஜிப்மர் என்னும் கோவிந்த் வல்லப் பந்த் ஆஸ்பத்திரி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பணியில் உள்ள நர்சுகள் மலையாள மொழியில் பேசுவதற்கு தடை விதித்து நிர்வாகம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.இந்த உத்தரவில் கூறி இருந்ததாவது:-

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணியிடங்களில் தொடர்பு மொழியாக மலையாளம் பேசப்படுவது தொடர்பாக புகார் வந்துள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான நோயாளிகள், ஊழியர்களுக்கு இந்த மொழி தெரியாது. இதனால் சிரமத்துக்கு ஆளாகி உதவியற்றவர்களாக உணர்கிறார்கள். எனவே நர்சுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். இதை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கையை முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இது மிகவும் மோசமானது என கண்டித்த அவர், ஜனநாயக இந்தியாவில் ஒரு அரசு நிறுவனம், தனது நர்சுகளை தங்கள் தாய்மொழியில் பேசக்கூடாது என்று சொல்வது சரியல்ல, இது ஏற்க முடியாதது. அடிப்படை மனித உரிமை மீறல் என கூறி இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், அந்த ஆஸ்பத்திரியின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

அதில் அவர், மலையாளம் பிற இந்திய மொழிகளைப்போல ஒரு மொழிதான். மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் என கண்டித்ததுடன், இது தொடர்பான பத்திரிகை செய்தியையும் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இப்படி எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து அந்த உத்தரவை வாபஸ் பெறும்படி ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்திர குமார் ஜெயின் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, நர்சுகள் மலையாளத்தில் பேச விதித்த தடையை அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் திரும்பப்பெற்று விட்டது.

இந்த விவகாரத்தில் டெல்லியின் கெஜ்ரிவால் அரசை பா.ஜ.க. சாடி உள்ளது.

இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் டாம் வடக்கண் கருத்து தெரிவிக்கையில், இந்த உத்தரவை அவசரமாக திரும்பப்பெறுவது, இந்திய அரசியல் சாசனமும், அதன் அங்கீகரிக்கப்பட்ட மொழியும் ஒரு பொருட்டல்ல என்று காட்டுகிற ஒரு அராஜக மாநில அரசை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை காட்டுகிறது. இந்த அரசுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டபோது கேரளாவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இப்போது மலையாளத்தில் பேசும் உரிமையை பறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது என சாடினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்