தேசிய செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் விசாரிப்பார்

ஐகோர்ட்டில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை, நீதிபதி விமலாவுக்கு பதிலாக 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

பின்னர் அவர்களில் ஜக்கையன் மட்டும் சபாநாயகர் முன் நேரில் ஆஜராகி, இதுகுறித்து விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவரை தவிர வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட மற்ற 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வு கடந்த 14-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், இந்த வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி எஸ்.விமலா நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் சார்பில் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், கூறப்பட்டு இருந்ததாவது:-

சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால், சுப்ரீம் கோர்ட்டே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் இந்த வழக்கு நடைபெற்றால் எங்களால் உரிய நியாயத்தை பெற முடியாது என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. எதிர் அணியில் தற்போதைய முதல்-அமைச்சர், சபாநாயகர் மற்றும் இந்த வழக்கினால் பாதிக்கப்படும் துணை முதல்-அமைச்சர் ஆகியோர் உள்ளனர்.

மேலும் தற்போது 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எஸ்.விமலாவின் மருமகள் அதே கோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றுகிறார். எனவே, இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் வகையில் இந்த வழக்கை தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள ஏதாவது கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் அல்லது சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் கடந்த திங்கட்கிழமையன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் புதன் கிழமை வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்ஜய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் விகாஸ் சிங், மோகன் பராசரன், வக்கீல் ராஜா செந்தூர்பாண்டி ஆகியோரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.

வெற்றிவேல் உள்ளிட் டோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங் வாதாடுகையில் கூறியதாவது:-

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 151ஏ அடிப்படையில் காலியான இடங்களுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்த 18 பேரின் தொகுதிகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து காலியாக இருக்கின்றன.

11 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கொறடாவின் உத்தரவுக்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.

அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் அந்த 11 எம்.எல்.ஏ.களுக்கு எதிராக நோட்டீஸ் கூட அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சபாநாயகரின் அதிகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்று கூறி அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆனால் இந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் அதே நாளில் சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார். தகுதி நீக்கம் குறித்த முடிவு 25 நாட்களுக்குள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த தகுதி நீக்க வழக்கில் சென்னை ஐகோர்ட்டு கடந்த ஜனவரி மாதம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. காலியான இடங்களுக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. இப்போது 6 மாதங்கள் கடந்த பிறகு ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் தனது வாதத்தின் போது கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-

உங்கள் வாதத்தின் இந்த பகுதியில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு உங்கள் தரப்பில் 4 மாதங்களுக்கு கோர்ட்டில் வாதம் நடைபெற்று உள்ளது. நீங்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் ஐகோர்ட்டில் தீர்ப்பு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது என்று கூறப்பட்டு இருக்கிறது.

நீதிபதிகள் ஒன்றும் கம்ப்யூட்டர்கள் அல்ல. ஒரு பொத்தானை தட்டினால் தீர்ப்பு வந்துவிடுமா? எனவே உங்கள் கூற்று தவறானது. ஐகோர்ட்டில் இந்த வழக்கில் கடந்த ஜனவரி 23-ந் தேதி அன்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 14-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நீங்கள் தாக்கல் செய்த மாறுதல் கோரும் மனுவை, இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதற்கும், வழங்கப்பட்டதற்கும் இடையேயான கால அளவு குறித்து குளறுபடிகள் எதுவும் இல்லாமல் எளிமையாக உங்கள் தரப்பு தாக்கல் செய்து இருக்கலாம். எனவே இந்த வாதத்தையும், உங்கள் மனுவில் உள்ள குற்றச்சாட்டையும் நீங்கள் வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

அதற்கு விகாஸ் சிங், நீதிபதிகளின் கூற்றை ஏற்றுக் கொள்கிறோம். இப்படி குத்துமதிப்பாக சொன்னதற்கு பதிலாக நான் நான்கு மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் என்று குறிப்பாக சொல்லி இருக்க வேண்டும் என்றார்.

மேலும் டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை தனி அமர்வு விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததை கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புவதாகவும், அதேபோல் இந்த வழக்கிலும் இந்த கோர்ட்டே நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், நாங்கள் மூன்றாவது நீதிபதியை நியமிக்கிறோம். ஆனால் உங்கள் தரப்பில் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். எந்த நீதிபதியின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறினார்கள்,

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரியமா சுந்தரம் வாதாடுகையில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மீது இவர்கள் குற்றம் சுமத்தி இருக்கிறார்கள் என்றும், 3-வது நீதிபதியை நியமனம் செய்ததில் தலைமை நீதிபதிக்கு எந்த பங்கும் கிடையாது என்றும் கூறினார்.

நீதிபதிகள் கேட்டுக் கொண்டபடி, மனுதாரர்களின் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்வதாகவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங் கூறினார்.

விசாரணையின் போது, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்படும் 3-வது நீதிபதி குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று விகாஸ் சிங் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

அத்துடன், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நீங்கள் வாதாடக் கூடாது என்று வக்கீல்களுக்கு நேர வரம்பை விதிக்க முடியுமா? பல வக்கீல்கள் மாதக் கணக்கில் வாதங்களை நடத்துகிறார்கள். அதனால் இதுபோன்ற கால வரம்பை எல்லாம் விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து வேறு கோர்ட்டுக்கு மாற்ற மறுத்த நீதிபதிகள், 3-வது நீதிபதி நியமனத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக மனுதாரரின் மனுவில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நீக்கப்படுகின்றன என்றும், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.சத்தியநாராயணனை நியமிப்பதாகவும், அவர் இந்த வழக்கை விசாரித்து உரிய முடிவு எடுப்பார் என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணனுக்கு மாற்றப்பட்ட இருப்பதால், ஏற்கனவே 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.விமலாவை அவமதிப்பது ஆகாது என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கப்போகும் 3-வது நீதிபதி எம்.சத்தியநாராயணன், திண்டுக்கல்லில் பிறந்தவர். இவரது தந்தை என்.மீனாட்சிசுந்தரம், மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

சென்னை வைஷ்ணவா கல்லூரியில் பட்டப்படிப்பையும், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து, 1983-ம் ஆண்டு வக்கீலாக பார் கவுன்சிலில் பதிவு செய்தார். சென்னை ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி வந்தார்.

2008-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்தியநாராயணன், 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை ஐகோர்ட்டில் 7-வது மூத்த நீதிபதியாக உள்ளார்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளித்து உள்ளார்.

கிராமப்புறங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினார்கள். எனவே இந்த வழக்கை விசாரிக்க 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்