கொல்கத்தா,
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலை பெற்று சட்டம் ஆகியுள்ளது. இருப்பினும், அதற்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறி வருகிறார். அந்த சட்டத்துக்கு எதிராக அவர் ஏற்கனவே 2 நாட்கள் கண்டன பேரணி நடத்தினார்.
தொடர்ந்து 3-வது நாளாக, நேற்றும் அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து பேரணி நடத்தினார். ஹவுரா மைதானத்தில் இருந்து கொல்கத்தாவின் மையப்பகுதியான எஸ்பிளனேடுவரை பேரணி நடைபெற்றது.
ஹவுரா மைதானத்தில் பேரணி தொடங்கும்போது, தொண்டர்களிடையே மம்தா பானர்ஜி பேசினார். அவர் பேசியதாவது:-
தேசிய குடிமக்கள் பதிவேட்டையும், குடியுரிமை திருத்த சட்டத்தையும் மேற்கு வங்காளத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். யாரையும் மாநிலத்தை விட்டு போக சொல்ல முடியாது.
மதம், சாதி, இன பாகுபாடின்றி அனைவரும் சேர்ந்து வாழ்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாம் அனைவரும் இந்நாட்டின் குடிமக்கள். யாரையும் எங்களிடம் இருந்து பிரிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
மம்தா பானர்ஜி தலைமை தாங்கிய இந்த பேரணி, கொல்கத்தா எஸ்பிளனேட்டில் முடிவடைந்தது. அங்கும் தொண்டர்களிடையே மம்தா பானர்ஜி பேசினார். அப்போது, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை காட்டமாக விமர்சித்தார்.
அவர் பேசியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டத்தால், நாடே பற்றி எரிகிறது. தீ மேலும் பரவாமல், அதை அணைக்க வேண்டிய பொறுப்பு, அமித் ஷாவுக்கு இருக்கிறது. அவரது வேலை, தீ வைப்பது அல்ல, தீயை அணைப்பது தான். அவர் நாட்டை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். பா.ஜனதாவினரை அடக்கி வைக்க வேண்டும்.
குடியுரிமைக்கு ஆதாரை ஆதாரமாக கருத முடியாது என்று அமித் ஷா கூறுகிறார். அப்படியானால், எல்லா நலத்திட்டங்களுக்கும், வங்கி கணக்குக்கும் ஏன் ஆதாரை இணைக்கச் சொன்னார்கள்?
பிரதமர் மோடி, அனைவரையும் சேர்த்துக்கொண்டு அனைவருடனும் வளர்வோம் என்று கூறி வருகிறார். ஆனால், குடியுரிமை திருத்த சட்டம், ஒவ்வொருவருக்கும் பெரும் நாசத்தை விளைவித்திருக்கிறது.
ஒட்டுமொத்த நாட்டையும் காவல் முகாமாக மாற்ற அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். குடியுரிமை திருத்த சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவற்றை மேற்கு வங்காளத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டக்காரர்கள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. ஒன்றிரண்டு வன்முறை சம்பவங்களுக்காக, மேற்கு வங்காளத்தில் நீண்ட தூர ரெயில் சேவையை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, மத்திய அரசு ரெயில் சேவையை தொடங்க வேண்டும். இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.