புதுடெல்லி,
சித்தூரை ஆண்ட ராணி பத்மாவதியை மையமாக கொண்டு பத்மாவதி திரைப்படம் தயாரானது. ராஜபுத்திர வம்சம் பற்றி அவதூறாக இந்த படத்தில் இடம் பெற்று இருப்பதாக சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்தனர். ஆனால் இந்த படத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது.
இதையடுத்து படக்குழுவினர் பத்மாவதி என்ற பெயரை பத்மாவத் என மாற்றி திரையிட தயாராகினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, அரியானா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நேற்று முன்தினம் போராட்டங்கள் நடைபெற்றன.
அரியானாவில் பள்ளி மாணவ-மாணவிகள் சென்ற வேன் மீது நேற்று முன்தினம் மர்ம கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை தடுக்க முயன்ற போலீசார் மீதும் கல்வீசப்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு கும்பல் காருக்கு தீவைத்தனர். அப்போது கர்னி சேனா அமைப்பினர் கூறுகையில், தங்களை கைது செய்தாலும், தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினாலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றனர்.
பத்மாவத் படத்துக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு கர்னி சேனா அமைப்பினர் நேற்று அழைப்பு விடுத்தனர். இதனால் குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் காலை நேரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள் ஒரு சில இடங்களில் இயங்கவில்லை. எனினும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், இதர வாகனங்கள் வழக்கம் போல இயங்கின.
மத்திய பிரதேச மாநில தியேட்டர் உரிமையாளர்கள் அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை சந்தித்து வன்முறை காரணமாக பத்மாவத் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என தெரிவித்தனர். தியேட்டர் உரிமையாளர்கள் திரைப்படத்தை திரையிட விரும்பினால் பாதுகாப்பு தர தயாராக இருப்பதாக இந்த மாநில அரசு தெரிவித்தது.
இந்நிலையில் பலத்த எதிர்ப்பையும் மீறி பத்மாவத் திரைப்படம் நேற்று நாடு முழுவதும் வெளியானது. திரைப்படம் வெளியான தியேட்டர்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர். பல மாநிலங்களில் கடும் பனிமூட்டம் மற்றும் சில அமைப்புகளின் வன்முறை காரணமாக காலை நேரங்களில் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆனால் பிற்பகலுக்கு பிறகு திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது. எனினும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்த படம் நேற்று வெளியாகவில்லை.
இதனிடையே உத்தரபிரதேசத்தில் படத்தை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளரை சிலர் சரமாரியாக தாக்கினர். அவருடைய காரையும் சேதப்படுத்தினர்.
இதேபோல் வாரணாசியில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு காகத்ரிய மகாசபை அமைப்பினர் பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது தர்மேந்திரா என்பவர் திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.