தேசிய செய்திகள்

‘தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வாய்ப்பு இல்லை’ ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மத்திய மந்திரிகளை சந்தித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, டாக்டர் மைத்ரேயன் எம்.பி. மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர், தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

மரியாதை நிமித்தமான சந்திப்பு

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.17 ஆயிரம் கோடி நிதியை உடனே விடுவிக்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அமைச்சர்கள், நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் வலியுறுத்தினர். தற்போது மரியாதை நிமித்தமாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்தோம்.

மத்திய அரசுடன் சுமுகமான உறவு வைத்துக்கொண்டு, தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை பெற போராடி வருகிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் பிரச்சினையாகிவிட்டது. மீண்டும் அதற்கு ஒரு நல்ல முடிவு காண நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சி கலைப்பு இல்லை

இதற்கிடையே மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்குடன் நடந்த சந்திப்பின்போது, தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அமைச்சர்களிடம், தமிழகத்தில் ஆட்சியை கலைக்க எந்த வாய்ப்பும் இல்லை என்று ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முகாந்திரம் இல்லை

மேலும், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள 19 எம்.எல்.ஏ.க்களும் முதல்- அமைச்சர் மீது தான் நம்பிக்கை இல்லை என்று கூறி யிருக்கிறார்கள். முதல்- அமைச்சர் யார்? என்பதை எம்.எல்.ஏ.க்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் கவர்னர் எந்த முடிவும் எடுக்க முடியாது. கட்சியின் உள் விவகாரங்களில் கவர்னர் தலையிட முடியாது. எனவே, ஆட்சியை கலைப்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்று அமைச்சர்களிடம் அவர் உறுதிபட தெரிவித்துள்ளதாக கூறப்படு கிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் அதற்காக சபாநாயகரை தான் சந்திக்க வேண்டும். கவர்னரையும், ஜனாதிபதியையும் ஏன் சந்திக்கிறார்கள்? என்று புரியவில்லை என்றும் ராஜ்நாத்சிங் கூறியதாக தெரிகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு