கவுகாத்தி,
அசாம் மாநிலம் கோஹ்புர் மற்றும் மோரன் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
முந்தைய காங்கிரஸ் அரசு அசாமை மீண்டும் அதன் பழைய பிரச்சினைகளுக்குள் தள்ளிவிட்டனர். இத்தனைக்கும் மன்மோகன்சிங் இந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாநிலத்தின் இளம் தலை முறையினர் மூத்தவர்களிடம், காங்கிரஸ் எப்படி தொடர்ந்து இந்த மாநிலத்துக்கு துரோகம் செய்தது என்று கேட்கிறார்கள். இந்த மாநிலம் பெரும்பகுதியை ஏறக்குறைய இழந்துவிட்டது.
வங்காளதேச போரின்போது ஜனசங்கத்தில் இருந்த வாஜ்பாய் போன்ற தலைவர்கள் நிரந்தர தீர்வுக்காக குரல் கொடுத்தனர். நாட்டின் நலன் கருதி அன்றைய அரசு எடுக்கும் முடிவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தனர். ஆனால் அன்றைய காங்கிரஸ் அரசு அதை செய்து முடிக்கவில்லை.
அசாம் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் கிளர்ச்சி ஆரம்பக்கட்டத்தில் இருந்தபோதே அதனை கையாள்வதில் காங்கிரஸ் தவறான கொள்கையை கடைபிடித்தது. அதனாலேயே இந்த பிராந்தியம் இன்னும் அதன் எதிர்மறையான தாக்கத்திலேயே தள்ளாடி வருகிறது.
இந்த காவலாளி அந்த வரலாற்று தவறுகளை சரிசெய்ய முயற்சிக்கிறார். அதற்காகவே இந்த தேர்தல். இப்போதுள்ள சூழ்நிலையை பாருங்கள். நாடு தனது வலிமையை காட்டுகிறது, நமது வீரர்கள் தங்கள் வீரத்தை பறைசாட்டுகிறார்கள். பழைய பாரம்பரியம் மற்றும் கொள்கைகள் மாறிவருகிறது.
ஒட்டுமொத்த உலகமே நமக்கு ஆதரவாக நிற்கிறது. ஆனால் நமது வீட்டில் இருக்கும் கலவையான குடும்பத்தினர் (மகா கூட்டணியினர்) நமக்கு ஆதரவாக நிற்க தயாராக இல்லை. அவர்கள் தனித்து செயல்படுகிறார்கள். இந்த காவலாளியை எதிர்ப்பதன் மூலம் இந்தியாவை எதிர்க்கிறார்கள்.
நீங்கள் நாட்டுக்கு ஒரு பிரதமரை 10 ஆண்டுகளுக்கு வழங்கினீர்கள். இன்னும் அவரை ஞாபகம் இருக்கிறதா? மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அப்படி ஒரு பிரதமர். இந்த மாநிலத்தில் ஊடுருவல், பயங்கரவாதம், ஊழல் ஆகிய பிரச்சினைகளை என்னால் தீர்க்க முடியும். இந்த காவலாளியால் தனியாகவே அசாம் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
ஒரு கையில் இந்த வலிமையான காவலாளியையும், மற்றொரு கையில் கலவையான குடும்பத்தினரையும் வைத்து பாருங்கள். உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக அருணாசல பிரதேசம் இடாநகரில் பிரதமர் மோடி பேசியதாவது:-
துல்லிய தாக்குதல் நடத்தியபோது, நமது விஞ்ஞானிகள் உலகையே வியக்க வைத்தனர். ஆனால் எதிர்க்கட்சியினர் அதனை கேலி செய்தனர். தேசமே பெருமைப்படும்போது அவர்கள் பயங்கரவாதிகளின் வழிகாட்டிபோல பேசினார்கள்.
இந்தியாவில் அவர்களது குரலை அங்கீகரிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் அவர்களை கதாநாயகர்களாக கொண்டாடுகிறார்கள். தேசத்தின் பெருமைக்கு அவமரியாதை செய்த அவர்களுக்கு நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
காங்கிரசும், ஊழலும் கடந்த 55 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து உள்ளது. அவர்கள் விவசாயிகளின் நிலம், ராணுவ சொத்துகள், ஏழை மக்களின் ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தார்கள். இப்போது மத்திய அரசின் திட்டங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
இந்த 5 வருட ஆட்சியில் கிடைத்த அனுபவத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் 25 ஆண்டுகளுக்கு தேவையான அடிப்படை வளர்ச்சிகளை செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.