காந்திநகர்,
குஜராத் காங்கிரசில் பிரபல தலைவராக விளங்கி வந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் சங்கர்சிங் வகேலா கடந்த 21ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மீண்டும் 3 எம்.எல்.ஏ.க்கள் விலகினர்.
அதன்படி சட்டசபை காங்கிரஸ் கொறடாவும், சித்பூர் எம்.எல்.ஏ.வுமான பல்வந்த்சிங் ராஜ்புத், விரம்கம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. தேஜாஸ்ரீ படேல் மற்றும் பி.ஐ.படேல் ஆகிய 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மாநிலத்தில் கட்சியின் நடவடிக்கைகளால் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதாக கூறி பதவி விலகிய அவர்கள், தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராமன்லால் வேராவிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் பா.ஜனதாவில் இணைந்தனர். வகேலாவின் உறவினரான ராஜ்புத், குஜராத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8ந்தேதி நடைபெற இருக்கும் டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிடுவார் என தெரிகிறது.குஜராத் காங்கிரசில் இருந்து ஒரே வாரத்தில் பல எம்.எல்.ஏ.க்கள் விலகியிருப்பது, கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.