புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், நாட்டில் கடந்த நிதியாண்டில் மொத்த நிலக்கரி உற்பத்தியானது 2% சரிவு அடைந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி மத்திய நிலக்கரி துறை அமைச்சகத்தில் இருந்து கிடைத்த புள்ளிவிவரங்களில், கடந்த 2020-21வது நிதியாண்டில் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 71.61 கோடி டன்னாக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது, அதற்கு முந்தைய நிதியாண்டின் நிலக்கரி உற்பத்தியைவிட 2 சதவீதம் குறைவாகும். 2019-20வது நிதியாண்டில் நாடு 73.09 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்தது.
கடந்த நிதியாண்டின் 71.61 கோடி டன் மொத்த உற்பத்தியில், 67.12 கோடி டன் கோக்கிங் அல்லாத நிலக்கரி மற்றும் மீதமுள்ள 4.49 டன் நிலக்கரி கோக்கிங் நிலக்கரி என்று தெரிய வந்துள்ளது. மொத்த நிலக்கரி உற்பத்தியில் 68.6 கோடி டன் பொதுத்துறையும், மீதமுள்ள 3.01 கோடி டன் தனியார் நிறுவனங்களும் உற்பத்தி செய்துள்ளன.