புதுடெல்லி,
எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களை கொண்டே 100 சதவீத பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும் என்று கடந்த 1986-ம் ஆண்டில் ஆந்திர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மாநில நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆந்திர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில், 1998-ம் ஆண்டு மாநில நிர்வாக தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆந்திர அரசு 2000-வது ஆண்டில் மீண்டும் இது தொடர்பாக அரசாணை பிறப்பித்து எஸ்.சி. பிரிவினர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பழங்குடியினருக்கு ஆசிரியர் பணியிடங்களுக்கு மீண்டும் 100 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. ஆந்திர அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சி.லீலா பிரசாத்ராவ் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினித் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆந்திர அரசு, இந்த இடஓதுக்கீடு முறையை பரிசீலனை செய்ய வேண்டும். இந்த பரிசீலனையின்போது உண்மையான பயனாளர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக உள்ள இடஒதுக்கீடு நடைமுறையில், போதுமான முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள் இந்திரா சாஹானி பரிந்துரையின்படி அமல்படுத்தப்பட வேண்டும் என்ற ராஜீவ் தவானின் கருத்தை இந்த அமர்வு ஏற்றுக்கொள்கிறது.
2000-வது ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 3/2000 அரசாணையின்படி, 100 சதவீத அனுமதி என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்திரா சாஹானி பரிந்துரையில் இது 50 சதவீதம் என்றே இருந்தது. தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒரு பிரிவினருக்கு மட்டும் 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை ஏற்கமுடியாது.
பழங்குடியின மாணவர்களுக்கு அதே பிரிவைச் சேர்ந்தவர்களே பாடம் கற்பிக்க வேண்டும் என்ற யோசனை அபத்தமானது. மற்ற பிரிவு மக்கள் சொல்லிக்கொடுத்தால், பழங்குடியினர் மாணவர்களுக்கு புரியாதா? மாணவர்களின் கல்வித்தரம் அவர்கள் சார்ந்த சமுதாயத்தை வைத்து கணக்கிடப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.
ஆந்திர மாநில அரசின் இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இதுவரை பணியமர்த்தப்பட்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இனிமேல் பணியமர்த்தப்பட உள்ளவர்கள் விவகாரத்தில் மாநில அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். இவ்வாறு இந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.