மகாராஷ்டிராவில் கல்யாண் தோம்பிவிலி நகராட்சியில் பெண் உறுப்பினராக இருந்து வருபவர் பிரமீளா சவுத்ரி. கல்யாண் தோம்பிவிலி நகராட்சி தலைமையகத்தில் இன்று மதியம் பொது குழு கூட்டம் நடந்து வந்தது.
இங்கு திடீரென வந்த பிரமீளா, நகராட்சி உறுப்பினர்கள் அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊரக வளர்ச்சி துறை மீது குற்றச்சாட்டு கூறினார். இதன்பின் அங்கு அமர்ந்திருந்த அதிகாரிகளை நோக்கி சென்ற அவர் மேஜை மீது தனது வளையல்களை கழற்றி வீசி எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து அவையின் மையத்திற்கு சென்று நகராட்சி ஆணையாளர் கோவிந்த் போத்கே மீதும் வளையல்களை வீசினார். இந்த சம்பவத்தினால் வருத்தமடைந்த போத்கே கூட்டம் நடந்த அறையில் இருந்து வெளியேறினார். இதனால் இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய போத்கே, இந்த சம்பவம் பற்றி போலீசாரிடம் புகார் அளிப்பேன் என கூறினார்.