புதுடெல்லி,
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டம், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்தது ஆகும். அங்கு மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் கிஸ்டாராம், பல்லோடி ஆகிய இடங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம்கள் உள்ளன. அந்த முகாம்களுக்கு மேலே கடந்த மாதம் ஆளில்லா குட்டி விமானம் ஒன்று பறந்தது. அதில் இருந்து சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஒளி தென்பட்டது. குறைவான சத்தம் எழுப்பியது.
அதைக் கண்டு சந்தேகம் அடைந்த ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், தாக்குதல் நடத்த தயாராகினர். பக்கத்தில் உள்ள வேறு முகாம்களும் உஷார்படுத்தப்பட்டன. சுடுவதற்கு குறி பார்க்க தொடங்கியவுடன், அந்த விமானம் அங்கிருந்து மறைந்தது. 3 நாட்களில் 4 தடவை அந்த விமானம், முகாம்களுக்கு மேலே பறந்துள்ளது.அந்த விமானம், 4 கால்கள் கொண்ட குட்டி விமானம் ஆகும். தரையில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக்கூடியது. திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளை படம் பிடிக்க பயன்படுத்தப்படுவது போன்ற விமானம் ஆகும்.
சம்பந்தப்பட்ட முகாம்கள் அமைந்துள்ள இடம், மாவோயிஸ்டுகள் அடிக்கடி ஆயுதத்துடன் தென்படும் பகுதி ஆகும். எனவே, மாவோயிஸ்டுகள்தான் இந்த குட்டி விமானத்தை இயக்கி இருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, மாவோயிஸ்டுகளின் ஆளில்லா விமானம் எங்கு தென்பட்டாலும், கண்டதும் சுடுமாறு பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த எல்லா மாநிலங்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாவோயிஸ்டுகள், ஆளில்லா விமானம் வாங்குவார்கள் என்று நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்தோம். உண்மையிலேயே அவர்கள் வாங்கி விட்டார்கள். இது ஒரு புதிய சவால்தான். தீவிர கவலை அளிக்கக்கூடிய பிரச்சினை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மும்பையில் உள்ள ஒரு வியாபாரி, அடையாளம் தெரியாத சில நபர்களுக்கு சமீபத்தில் ஆளில்லா விமானங்களை விற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் மாவோயிஸ்டுகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே, அந்த வியாபாரியை உளவு பிரிவினர் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.