செய்திகள்

பாதுகாப்பு படையினரின் சட்டையில் பொருத்தக்கூடிய நவீன கேமராக்களை கூடுதலாக கேட்டு ரெயில்வே பொது மேலாளருக்கு கடிதம்

ரெயில்வே பாதுகாப்பு படையினரின் சட்டையில் பொருத்தக்கூடிய நவீன கேமராக்களை கூடுதலாக கேட்டு தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக ரெயில்வே பாதுகாப்புப்படை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

இந்தியன் ரெயில்வேயில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளனர். ரெயில் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை 24 மணி நேரமும், அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக சட்டையில் பொருத்தக்கூடிய நவீன கேமராக்கள், கடந்த ஆண்டு பாதுகாப்புப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு ரெயில்வே மண்டலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கேமராக்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அந்தவகையில் தெற்கு ரெயில்வே மண்டலத்துக்குட்பட்ட 6 கோட்டத்துக்கும் தலா 2 கேமராக்கள் வீதம் 12 கேமராக்களை ரெயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு வழங்கியது.

அதன்படி சென்னைக் கோட்டத்தில் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், மதுரைக் கோட்டத்தில் மதுரை மற்றும் நெல்லை ரெயில் நிலை யம் என 6 கோட்டங்களின் முக்கியமான ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில்வே பாதுகாப்புப்படைக்கு மட்டும் இந்த நவீன கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவின் படம் உணர்வு திறன் 10 மெகா பிக்சல், சேமிப்புத் திறன் 32 ஜி.பி மற்றும் பேட்டரி 3 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. இந்த கேமராக்கள், ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்களின் தற்காப்புக்கும், பயணிகளின் பாதுகாப்புக்கும் வழங்கப்பட்டவை ஆகும்.

இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் மூத்த பாதுகாப்புப்படை அதிகாரி கூறியதாவது:-

தெற்கு ரெயில்வேக்கு கடந்த ஆண்டு 12 கேமராக்கள் வழங்கப்பட்டது. தற்போது மேலும் கூடுதலாக கேமராக்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி ஒரு கோட்டத்துக்கு 10 கேமராக்கள் வீதம் 6 கோட்டத்துக்கு 60 கேமராக்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு கோட்டத்திலும் கூடுதலாக கேமராக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இதை நவீனப்படுத்தும் விதமாக கேமராவில் பதிவாகும் நிகழ்வுகளை புது தொழில்நுட்பத்துடன் பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் தங்களது செல்போனில் நேரடியாக பார்க்கும் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். விரைவில் இதனை செயல்படுத்த உள்ளோம்.

கேமரா பேட்டரியில் அதிக நேரம் சார்ஜ் நிற்பதில்லை என்ற புகார் வந்தது. அதையும் சரி செய்து அதிக நேரம் சார்ஜ் நீடித்து இருக்கக்கூடிய வகையில் கேமராக்களை வாங்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் ரெயில் நிலையத்தில் நடக்கும் குற்றங்களையும், குற்றவாளிகளையும் எளிதில் அடையாளம் காணமுடியும். மேலும் இது எங்களையும் தற்காத்துக் கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்