நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் எடுக்கப்பட்டு உள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை, குழந்தை திருமணங்களை தடுக்க சைல்டு லைன் அமைப்பிற்கு 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு வந்த புகார்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துவது குறித்து வந்த புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பாராட்டு
மேலும் அவர் பெண் குழந்தை பிறப்பு விகித அதிகரிப்பிற்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும், கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதாரத்துறை மேற்கொண்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். 18 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வருகின்ற புகார்கள் குறித்து சைல்டு லைன், இளைஞர் நீதி சிறார் குழுமம், குழந்தைகள் நல குழுமம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட துறைகள் இணைந்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். இதையொட்டி தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்ற மற்றும் வெற்றிபெற்ற 18 வயதிற்கு உட்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை டாக்டர் ஆனந்த் வழங்கினார்.
24 ஆயிரம் புகார் மீது நடவடிக்கை
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தேசிய குழந்தைகள் ஆணையம் பெஞ்ச் அமைத்து, நேரடியாக புகார்களை பெற்றுக்கொள்கிறது. அந்த வகையில் கடந்த 3 மாதங்களில் 34 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு உள்ளது. இவற்றில் 24 ஆயிரம் புகார்களுக்கு கடுந்தண்டனையுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குழந்தைகள் ஆபாச படங்கள் பார்ப்பது காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவுடன் இணைந்து தடுக்கப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு துன்புறுத்தல் இருந்தால், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் கடந்த 6 மாத காலத்தில் அதுபோன்ற தவறு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதப்பிரியா, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) சாந்தி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சோமசுந்தரம் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.