செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு எதிராக புதிய வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்

கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால், ‘‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான, நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது.

தமிழகத்தில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்ததால், நீட் தேர்வுக்கு தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதேபோல் கேரளா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

அரசியல் அமைப்பு சட்டத்தின் இணக்க பட்டியலில் கல்வி வருவதால், நீட் தேர்வை அமல்படுத்துவது மாநிலங்களின் அதிகார வரம்பில் மத்திய அரசு தலையிடுவது போல் ஆகும் என்று சில மாநிலங்கள் வாதிட்டன. இது தொடர் பாக சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடுக் கப்பட்டன.

அந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நீட் தேர்வு அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி அகில இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2016-ம் ஆண்டில் நீட் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கியது.

இருந்தபோதிலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற மாநில அரசு சட்ட ரீதியாக போராடியது. இதனால், 2016-ம் ஆண்டில் மட்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு 2017-ம் ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

2017-ம் ஆண்டு மே 17 தேதி நடைபெற்ற நீட் தேர்வின் போது மாணவ-மாணவிகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சர்ச்சைகள் கிளம்பின.

மேலும் நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் வெவ்வேறாக இருந்தன என்று தொடரப்பட்ட வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து மருத்துவ கவுன்சில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதைத்தொடர்ந்து நீட் முடிவுகள் வெளியிடப்பட்டன.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கான சேர்க்கையின்போது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மாநில அரசு பிறப்பித்த அரசாணையை பின்னர் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து மருத்துவ கவுன்சில், நீட் தேர்வை கட்டாயமாக்கி இந்திய மருத்துவ மற்றும் பல் மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தங்களை செய்தது.

இந்த ஆண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.

தமிழக அரசின் சார்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடு தழுவிய அளவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கும் வகையில் மருத்துவ கவுன்சில் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மேற்கொண்ட சட்ட திருத்தம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இது மாநில அரசின் அதிகார வரம்பில் தலையிடுவதாக உள்ளது.

நீட் தேர்வினால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் மருத்துவ சுற்றுலா ஆகியவற்றில் சிறந்து விளங்கி வருகிறது. உலக அளவில் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள் பெரும் சாதனை புரிந்து வருகின்றன.

இந்த நிலையில் மாணவர்களிடையே சம வாய்ப்பை மறுக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்ட திருத்தம் கொண்டு வந்து இருப்பது எதிர்மறையான விளைவுகளை மாநிலத்தில் ஏற்படுத்தும்.

எனவே நீட் தேர்வை கட்டாயமாக்கி இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து தான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் வழக்குகள் தொடரப்பட்டு வந்தன. ஆனால் இப்போதுதான் நாட்டிலேயே முதல் முறையாக, நீட் தேர்வு கட்டாயம் என்று மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?