திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சுக்காம்பார் கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குவாரிக்கு நேற்று டிராபிக் ராமசாமி, அவருடைய உதவியாளர் பாத்திமா மற்றும் குழுவினருடன் வந்தார். அப்போது மணல் அள்ள வந்த லாரிகள் கொள்ளிடம் ஆற்றுக்குள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதை கண்டித்து அவர் மணல் குவாரியின் நுழைவு வாயில் பகுதியில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- லாரிகளை ஆற்றுக்குள் நிறுத்துவது சட்ட விரோதமானது. இப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர். திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், கரூர், அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மணல் அள்ள சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி மணல் அள்ள தஞ்சை மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கு நாங்கள் 4 முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இந்த நோட்டீசுகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. எனவே கலெக்டர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இன்று (நேற்று) ஞாயிற்றுக் கிழமை மணல் குவாரியில் மணல் அள்ளும் பணி நடைபெறாத நிலையில், ஆற்றுக்குள் லாரிகளை நிறுத்தி உள்ளனர். இதில் மர்மம் உள்ளது.
இவ்வாறு டிராபிக் ராமசாமி கூறினார்.
டிராபிக் ராமசாமியின் தர்ணா போராட்டம் குறித்து தகவல் அறிந்த தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் குவாரிக்கு வந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது லாரிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து டிராபிக் ராமசாமி தர்ணா போராட்டத்தை கைவிட்டு, மதுரை புறப்பட்டு சென்றார். டிராபிக் ராமசாமியின் திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.