சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். நேற்று மேட்டூர் தாலுகா எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியசோரகை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பலர் தங்கள் கோரிக்கை மனுக்களை மாலையாக தொடுத்து அதை கழுத்தில் அணிந்து வந்தனர்.
அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மாலையாக அணிந்து இருந்த கோரிக்கை மனுக்களை கழற்றும்படி கூறினர். அதன்பிறகு அவர்கள் அதை கழுத்தில் இருந்து கழற்றினர். பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை கலெக்டரை சந்தித்து கொடுத்தனர்.
பரபரப்பு
இது குறித்து அவர்கள் கூறும்போது, கடந்த 60 ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். அந்த இடத்தை தவிர வேறு இடம் எங்களுக்கு இல்லை. தற்போது குடியிருக்கும் வீடும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே நாங்கள் வசித்து வரும் கூரைவீட்டிற்கு பட்டா வழங்க வலியுறுத்தி பல முறை மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. எங்களிடம் ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் உள்ளன.
எனவே எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா விரைவில் வழங்க வலியுறுத்துவதற்காக கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்தோம் என்று கூறினர். நூதன முறையில் கோரிக்கை மனுவை பொது மக்கள் சிலர் மாலையாக அணிந்து வந்ததால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்று இடம்
இதேபோன்று ஜாகீர்ரெட்டிபட்டி அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் நாங்கள் 51 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அனைவரும் செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு ரெயில்வே துறையினர் கடிதம் அனுப்பி உள்ளனர். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.
இதேபோல் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதில், பல வருடங்களாக 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா இல்லை. தற்போது வீட்டை காலி செய்ய சொல்கிறார்கள். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நடனக்கலைஞர்கள் சங்கம்
இதே போன்று சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட திரைப்பட மேடை நடனக்கலைஞர்கள் நலச்சங்க நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்து உள்ளனர். அதில் ஓமலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் ஆபாச நடனம் நடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்க நிர்வாகிகள் அங்கு சென்றோம்.அங்கு ஆபாச நடனம் ஆடுவதை கண்டு எங்கள் நிர்வாகிகள் அதை செல்போனில் படம் பிடித்தனர். அப்போது அங்கு விழா நடத்திய சிலர் எங்கள் சங்க நிர்வாகிகளை தாக்கினர். எனவே நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆபாச நடனம் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.
இதே போன்று நேற்று ஏராளமானவர்கள் மனுகொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.