சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிக்குட்பட்ட 10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. 4 இடங்களையும், கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஒரு இடத்தையும், தி.மு.க. 3 இடங்களையும், இதன் கூட்டணி கட்சி காங்கிரஸ் ஒரு இடத்தையும் பெற்றது. மேலும் சுயேச்சை வேட்பாளர் சரண்யா ஸ்டாலின் ஒரு இடத்தை பெற்றார். இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் 5 ஒன்றிய கவுன்சிலர்களை கொண்டுள்ளனர். ஆனால் யூனியன் தலைவர் பதவிக்கு 6 கவுன்சிலர்கள் தேவை.
இந்த நிலையில் 2-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் சரண்யா ஸ்டாலின், தன்னை அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இதனால் அ.தி.மு.க.விற்கு மேலும் ஒரு கவுன்சிலர் ஆதரவு கிடைத்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. 6 கவுன்சிலர்களை பெற்று சிங்கம்புணரி யூனியன் தலைவர் பதவியை மீண்டும் தன் வசமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.