புதுடெல்லி,
புதுச்சேரி மாநிலத்தில் முதல்-மந்திரி நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்தநிலையில், புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் (காங்கிரஸ்) சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை கவர்னர் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகிறார். அவரது ஒட்டுமொத்த செயல்பாடும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவே உள்ளது. எனவே புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், அரசு ஆவணங்களை கேட்பதற்கும் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு துணைநிலை கவர்னர் கிரண்பெடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்துசெய்யப்படுவதாகவும் முதல்-அமைச்சரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும், புதுச்சேரி கவர்னரின் சிறப்பு அதிகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை செய்வதாகவும் கடந்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதியன்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் கிரண்பெடியின் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது கிரண்பெடி தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வாதாடுகையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவினால் புதுச்சேரி கவர்னர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எனவே, புதுச்சேரி அரசாங்கத்தின் அன்றாட செயல்பாடுகள் தடைபடுகின்றன. அதனால் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், எதிர்மனுதாரர் கே.லட்சுமிநாராயணன் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு கோடை விடுமுறைக்கு பிறகு இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.