அதுபற்றிய விவரம் வருமாறு:-
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு தள வரிசைக்கும் தனி அமைப்பு இருக்கும். லிப்ட் பராமரிப்பு, காவலாளி ஊதியம், பிற சிறு செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை, அதில் குடியிருக்கும் குடும்பத்தினரிடம் இருந்து மாதம்தோறும் வசூலிக்கும் நடைமுறையும் உள்ளது.
தள வரிசைக்குள் குடிபுகுந்துவிட்டால், உரிமையாளர், வாடகைதாரர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவரும் தளங்களில் வசிப்பவர்களே. குறைந்தபட்சம் 80 சதவீதம் அளவுக்கு பிளாட்களில் மக்கள் குடிவந்தவுடன்தான் காவலாளி நியமிக்கப்படுவார்.
பல இடங்களில் குடியிருப்புக்கென்று ஒரு சங்கம் ஏற்படுத்துகிறார்கள். இதற்காக ஆண்டுதோறும் கூட்டம் போட்டு, பொருளாளர், செயலாளர், தலைவரையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
அது போன்ற கூட்டம் நிகழ்ந்தால்தான் பல சிக்கல்களைப் பேசி முடித்து, தீர்வு காண இயலும். லிப்ட் நின்றுவிட்டால், மாடியில் இருப்பவர் சிரமப்படுவார். கழிவு நீர்ப்பாதையில் கோளாறு ஏற்பட்டால், கீழ்த்தள வரிசைக்காரருக்குத்தான் பிரச்சினை ஏற்படும்..
மின்சாதன பழுது என்றால், கூடுதல் கண்காணிப்பும் எச்சரிக்கையும் தேவை. டி.வி.யைப் பதிப்பது, பழுதடைந்த குளிர்சாதன கருவியை சரிசெய்வது போன்ற பணிகளுக்கு கூடுமானவரை உங்களுக்கு நன்கு தெரிந்த, பழக்கப்பட்ட பணியாளரையே அழைத்து சரிசெய்ய சொல்லுங்கள்.
குடியிருப்பு சங்கத்தின் விதிகளை சரிவர தெரிந்து கொள்ளுங்கள். வாசற்கதவைப் பூட்டுகிற நேரம், சில தென்னைகள் இருந்தால், பறிக்கப்படுகிற தேங்காய்களைப் பங்கு வைப்பது, இதுபோல் சின்ன விஷயங்களையும் தெரிந்து வைத்து கொள்வது நலம். கார் நிறுத்தும் இடத்தை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தள வரிசை எண்ணுக்கும் தனி நிறுத்தம் ஒதுக்கப்பட்டிருக்கும். அது காலியாக இருந்தால்கூட, வேறு வாகனத்தை நிறுத்தக்கூடாது. இதுபோன்ற விஷயங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கப் போகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.