உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடிவு செய்ய முடியாது, நான்தான், நானேதான் முடிவு செய்வேன் என்று கொரோனா காட்டிக்கொண்டிருக்கிறது.
வாழ்வாதாரம் தேடி சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்களும், அண்டை மாவட்ட மக்களும் குடும்பம், குடும்பமாய் படையெடுத்தது அந்தக் காலம்.
உயிர் பிழைப்பதற்காக சென்னையை காலி செய்துவிட்டு கூட்டம் கூட்டமாக சொந்த கிராமங்களுக்கு மக்கள் படையெடுப்பது நிகழ்காலம்.
எதற்காக இப்படி சென்னை காலி செய்கிறார்கள் ?
தொடர் ஊரடங்கா, பெருகி வரும் கொரோனா பாதிப்பா, வாடகை கொடுக்க முடியவில்லையா, வாழ்வாதரம் இல்லையா, உயிர்ப்பயமா? எதற்காக சென்னையை காலி செய்து விட்டு போகிறார்கள் என்றால், எல்லா கேள்விகளுக்கும் பதில் ஆமாம், ஆமாம் என்பதாகத்தான் ஆகி விட்டது.
கொரோனா வைரஸ் விலை மதிக்க முடியாத மனித உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறவர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்து விட்டது. மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு இன்னும் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ஊரடங்குக்குள் முழு ஊரடங்கு என்று ஒன்று இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து தரப்பினருக்கும் வேலையிழப்பு...
வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் இப்போது எல்லோரின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக பறிக்கப்பட்டிருப்பது வரலாறு காணாத சோகம் என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. பெரும்பாலான தொழில்நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டிருந்தாலும், சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இயங்கவில்லை. ஓட்டல்கள் திறந்தாலும் வாடிக்கையாளர் வரவு இல்லை.
பொது போக்குவரத்துகள் இயங்காததால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எளிதில் செல்ல முடியாத அவஸ்தைகள்.
கூலித்தொழிலாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் என பல்லாயிரக்கணக்கில் அனைத்து தரப்பினரும் வேலை இழந்திருக்கிறார்கள். அரசாங்கம் தருகிற ரேஷன் பொருட்களும், ஆயிரம் ரூபாயும் எத்தனை நாட்களுக்கு உதவி விட முடியும்?
பீச், பார்க், தியேட்டர், மால் என சுற்றித்திரிந்து கொண்டே இருந்தவர்களுக்கு வீடுகளுக்குள் அடைந்து கிடக்க பிடிக்கவில்லை.
வாடகையை கழித்தனர்...
வாடகை வீடுகளில் குடியிருந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து 3 மாதங்கள் வாடகை கொடுக்க முடியவில்லை. பெரும்பாலோர் ஒரு முடிவோடு, ஏற்கனவே கொடுத்த 3 மாத அட்வான்சில் இருந்து கழிக்கத்தொடங்கினர். வாடகை கொடுக்க முடியாத நிலையில் எத்தனை காலம் சென்னையில் தொடர முடியும்?
இன்னொரு பக்கம் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சென்னையில் கொரோனா பரவிய வண்ணம் இருக்கிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த உயிர்ப்பலிகள் இரட்டை இலக்கத்துக்கு தாவி நாட்கள் பல உருண்டோடி விட்டன. இதனால் இனி சென்னையில் வாழ்ந்தால் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்ற பயம், பரிதவிப்பு, பதற்றம் சென்னைவாசிகளுக்கு வந்துவிட்டது. பார்க்கும் இடம் எல்லாம் கட்டுப்பாட்டு மண்டலங்கள்.. புதிது புதிதாக கட்டுப்பாட்டு மண்டலங்கள்...
கூட்டம் கூட்டமாக படையெடுப்பு
அதனால்தான் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதற்குள் பறந்து விட வேண்டும் என்றுதான் கடந்த 2,3 நாட்களாக கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனங்களில், மினி வேன்களில், கார்களில், சரக்கு வாகனங்களில் என அனைத்து ரக வாகனங்களிலும் சென்னையை விட்டு படையெடுத்து கொண்டிருக்கிறார்கள். வண்டலூர், பரனூர், சோழாவரம் என பல இடங்களிலும் சோதனை சாவடிகள், பெர்லின் சுவர் போல இந்த மக்களுக்கு தடைச்சுவர்களாக வந்து நின்றன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
இ-பாஸ் வைத்திருந்தாலும் சரி, வைத்திருக்காவிட்டாலும் சரி, சோதனைச்சாவடி அதிகாரிகளை கடந்து செல்வதற்கு பாவம், இந்த மக்கள் ஒரு தர்மயுத்தமே நடத்த வேண்டியதிருக்கிறது.
செத்து செத்து பிழைக்கிற வாழ்க்கை...
சில சோதனைச்சாவடிகளில், இரு சக்கர வாகனங்களில் மனைவி, குழந்தைகள், பெட்டி, படுக்கை, தட்டுமுட்டு சாமான்கள் என செல்கிறவர்களை கருணை அடிப்படையில் மனிதாபிமானத்துடன் அனுப்பி விடுவதையும் பார்க்க முடிகிறது.
திண்டிவனம் பகுதியை சேர்ந்த சிவாவிடம் பேசியபோது, நமக்கு ஊரு திண்டிவனம் பக்கம்... இங்கே கோடம்பாக்கத்துல ஆட்டோ ஓட்டிட்டு இருந்தேன்... மூணு மாசமா ஆட்டோ ஓடலை. மனைவி.. ரெண்டு பசங்க... சேத்து வச்சிருந்த பணமெல்லாம் கரைஞ்சு போச்சு... செக்களவு பொன் இருந்தாலும் செதுக்கித்திங்க காணுமான்னு எங்கம்மா சொல்வாங்க. அது உண்மைதான். இப்போது சாப்பாட்டுக்கும் வழியில்லைங்கிற நிலை வந்துடுச்சு.. வீட்டு வாடகை தர முடியலை. பையனை ஸ்கூல்ல சேர்க்கணும். அதுக்கு பீஸ் கட்ட பணம் கிடையாது. மூணு மாத வாடகையை அட்வான்ஸ்ல கழிச்சிட்டேன்...இப்போ ஆட்டோவிலேயே ஊருக்குப் போறோம். இனி அங்க போய் விவசாயத்தை பார்த்துக்கிட்டு, அங்கேயே ஆட்டோ ஓட்டுறதுனு முடிவு பண்ணிட்டேன்... தினம் தினம் செத்து செத்து பிழைக்கிற இப்போதைய சென்னை வாழ்க்கை அலுத்துடுச்சு என சோகமாய் சொல்கிறார்.
கொரோனா எப்போ போகும்? இந்த லாக்டவுன் எப்போ முடிவுக்கு வரும்.. எதுவும் தெரியலை... வேலை பார்த்த எக்ஸ்போர்ட் நிறுவனத்தை மூடி ரெண்டு மாசமாச்சு... குடும்பம் நடத்தறதே கேள்விக்குறியாயிடுச்சு. கொரோனா பயம் ஒவ்வொரு நாளும் வாட்டி வதைக்குது.. எங்க ஊருக்கே போயிடலாம்னு கிளம்பி போய்க்கிட்டு இருக்கோம். இ பாஸ் இருக்கு. அதனால் தைரியமாக போகிறோம் என்கிறார் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சின்னதுரை காரில் பயணித்துக்கொண்டே...
அனுமதிக்கும் போலீசார்...
ஊருக்கு போகிறவர்களை தடுத்துநிறுத்துவது பற்றி ஜி.எஸ்.டி. சாலையில் பணியில் இருந்த பெயர் சொல்ல விரும்பாத போலீஸ் அதிகாரியை கேட்டபோது, செவ்வாய்க்கிழமை இரவு முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னையை விட்டு புறப்பட்டு போகத்தொடங்கி இருக்கிறார்கள். வீடுகளை காலி செய்து விட்டு ஏராளமானோர் போகிறார்கள். திருநெல்வேலி என்கிறார்கள். தூத்துக்குடி என்கிறார்கள், தென்காசி என்கிறார்கள்... எல்லோரிடமும் பாஸ் இருப்பது இல்லை. மினிவேன், மினி லாரி என சரக்கு வாகனங்களில் மூட்டை முடிச்சுகளோடு போகிறவர்களை என்ன செய்வது? பரிதாபமாக அவர்கள் பேசுவதைக் கேட்கிறபோது, மறுக்க முடியவில்லை. அனுப்பபத்தான் வேண்டி இருக்கிறது என்கிறார்.
தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊருக்கு போகிறவர்கள் சென்னையில் இருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என போய் விடலாம். வழியில் உள்ள எல்லா சோதனை சாவடிகளையும் கூட கடந்து போய்விடலாம். ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி என்று மாவட்ட எல்லைகளில் உள்ள சுங்க சவாவடிகளில் அவர்கள் மற்றொரு போராட்டத்தை போராட வேண்டியதிருக்கிறது.
சென்னையில் இருந்து வருகிற யாரையும் கொரோனா பரிசோதனை செய்து முடிவு வராமல் அனுப்புவதில்லை என்பதில் அங்கே உள்ள அதிகாரிகள் தெளிவாக இருக்கிறார்கள். சென்னையில் இருந்து போகிறவர்கள், இதையும் கடந்துதான் வீடு போக வேண்டும்.
அது சரி, சொந்த ஊர், அவர்களுக்கு சோறு போடுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!