ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ந்தேதி சர்வதேச தண்ணீர் தினத்தையொட்டி தன்னார்வ அமைப்புகள் மூலம் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவரின் வாக்கு. உயிரின் அடிப்படை ஆதாரம் நீர். தண்ணீர் இருக்கும் இடத்தில் நிச்சயம் உயிர்கள் இருக்கும். அதனால் தான் பல ஆயிரம் கோடி செலவு செய்து பல்வேறு கோள்களுக்கு விண்கலங்களை அனுப்பி அங்கும் தண்ணீர் இருந்து விடாதா என்று ஏங்கி தவிக்கிறது அறிவுமதி படைத்த உலகம்.
ஆம் இந்த பூவுலகில் அனைத்தும் வணிகமயமாகி விட்டதால் காற்றையும், தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைய நவீன சமூகம். அதுவும் தீர்ந்துவிடும் நிலையில் வேறு உலகத்தில் இடம்தேடுவது இயல்புதானே. இனிவரும் காலத்தில் தண்ணீர்தான் மூலாதார பிரச்சினை. பொதுவானவை எல்லாம் பொதுவாக ஒருவரின் கைக்கு கைமாறும் நிலையில் உலகம் சென்று கொண்டிருக்கிறது. மூன்றாம் உலகப்போர் வந்தால் அதற்கு தண்ணீர்தான் காரணம் என்று கல்வியாளர்கள் இப்போதே கூறத்தொடங்கி விட்டார்கள். இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் ஆண்டுக்கு ஆண்டு மழை குறைந்து வருகிறது. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீரின்றி உயிர்கள் மடிகின்றன.
நல்ல தண்ணீரில் மூன்றுக்கு இரண்டு பங்குக்கும் மேல் ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளிலும் இமயமலை போன்ற பனிமலைகளிலும் உறைந்து கிடக்கிறது. இதில் பெரும் பகுதி நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போல தண்ணீர் கிடைப்பதிலும் உலகில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் இருப்பவர்களில் ஒவ்வொருவருக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தண்ணீர் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
உலகில் உணவு உற்பத்தி ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாது. காரணம் விளைநிலங்களின் தட்டுப்பாடு அல்ல. தண்ணீர் தட்டுப்பாடு. 2050-ல் தண்ணீர் அப்போதைய தேவையை விட 27 சதவீதம் குறைவாகக் கிடைக்கும்.
இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரை சரியாக பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கடலில் கலக்கும் நீரின் அளவு மிக அதிகம். இந்திய நதிகள் உலக நதிகளின் நீர் அளவில் 4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் நிலத்துக்குமேல் கிடைக்கும் நீரில் சுமார் 30 சதவீதத்துக்கு நாம் அண்டை மாநிலங்களை சார்ந்திருக்கிறோம். பக்கத்து மாநிலங்களிலும் உபரிநீர் அதிகம் இல்லை. ஏற்கனவே நிலத்துக்குமேல் கிடைக்கும் நீரில் 95 சதவீதத்தையும், நிலத்துக்கு கீழ் கிடைக்கும் நீரில் 80 சதவீதத்தையும் வருடந்தோறும் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம்.
தமிழகம் நகரமயமாகும்போது தண்ணீரின் தேவையும் அதிகமாகிறது. எனவே இருக்கும் நீர் ஆதாரங்களை அழியாமல் நாம் காத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை கவனமாக பயன்படுத்த வேண்டிய அதைவிட அவசியம். பல்வேறு தொழிற்சாலைகள் பூமியை பல ஆயிரம் அடிக்கு துளையிட்டு வரைமுறையில்லாமல் தண்ணீரை உறிஞ்சுகின்றன. அதை கட்டுப்படுத்த யாரும் முன்வருவது இல்லை. மழைக்காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிக்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அவ்வப்போது அந்த திட்டத்தை நடைமுறை படுத்தாமல் முறையாக அமல்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் முன்வரவேண்டும்.
அறிவார்ந்த உலகம் தண்ணீர் பிரச்சினை குறித்து வருமுன் காக்க தவறினால் நகரங்களில் வீட்டு வாடகை விட தண்ணீருக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டும். சமீபகாலமாக மருத்துவத்திற்கும், தண்ணீருக்கும் ஒவ்வொரு குடும்பமும் செய்யும் செலவு அதிகரித்து வருவதை கண்கூடாக காண்கிறோம். ஆனால் தண்ணீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் யாரும் முன்வருவது இல்லை. இதே நிலை நீடித்தால் தண்ணீர் பிரச்சினைக்காக பல போராட்டங்களை சந்திக்க வேண்டிவரும். எனவே வருங்கால சந்ததியினருக்கு குடிநீர் பிரச்சினை என்பது ஏற்படாத வகையில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். பொதுமக்களிடம் தண்ணீர் தேவை குறித்தும், அதனை பெருக்குவதற்கும் விழிப்புணர்வை மாணவ சமுதாயத்தினர் ஏற்படுத்த வேண்டும்.