சிறப்புக் கட்டுரைகள்

இயல்பு நிலைக்கு மீண்டு விடுமா இலங்கை?

புராண காலம் முதலே தொன்றுதொட்டு வரும் இலங்கையில், இப்போது என்ன நடக்கிறது?, ஏன் இந்த மக்கள் போராட்டம்?, எதற்காக திடீர் அரசியல் மாற்றம்?, இயல்பாக இருந்தபோதே கஷ்டத்தை அனுபவித்த ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலை என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகள் அனைவரது மனதிலும் அணையா நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

தினத்தந்தி

பெயரில் 4 எழுத்துக்களை கொண்டிருப்பது போல், 4 புறமும் கடல் நீரால் சூழப்பட்ட தீவு நாடாகும். அருகே 3 புறமும் கடலால் சூழ்ந்திருக்கும் தீபகற்ப நாடான இந்தியா எனும் பாரதத் தாய்க்கு கீழே, பச்சிளம் குழந்தை போல சிறியதாக உலக வரைபடத்தில் காட்சியளிக்கிறது.

65 ஆயிரத்து 610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலங்கை, 2 கோடியே 17 லட்சம் மக்கள்தொகையை கொண்டது. இதில், ஈழத் தமிழர்கள் மட்டும் 11.2 சதவீதம் பேர். இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்துடன் ஒப்பிடும்போது கூட, இலங்கையின் பரப்பளவு சிறியதுதான். 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தமிழ்நாடு, சுமார் 8 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்டிருக்கிறது.

அந்த கேள்விகளுக்கான பதில் இதோ...

இலங்கையின் பொருளாதாரத்தை தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலா ஆகிய மூன்றும் தூண்களாக இருந்து தாங்கி நின்றன. அங்கு, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று அங்கு நடந்த அடுக்கடுக்கான குண்டு வெடிப்பு சம்பவங்களில் 270 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த சம்பவத்துக்கு பிறகு, இலங்கையில் வெளிநாட்டு பயணிகளின் வருகை குறையத் தொடங்கி, சுற்றுலா வருமானம் நலிவடைந்தது. கொரோனா காலத்தில் மேலும் அது வீழ்ச்சி கண்டது.

தவறான பொருளாதார கொள்கை

இலங்கையின் புதிய அதிபராக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்ற பிறகு, அவர் கையாண்ட தவறான பொருளாதார கொள்கை, நாட்டின் அனைத்து துறைகளையும் வீழ்ச்சியின் பாதைக்கு கொண்டு சென்றது. இந்த அசாதாரண சூழ்நிலைக்கு இடையே 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோத்தபய ராஜபக்சே அதிபராக வந்தவுடன், நாட்டில் விதிக்கப்பட்டு வந்த 15 சதவீத வரியை 8 சதவீதமாக குறைத்தார். இதனால், இலங்கை அரசின் வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக 2021-ம் ஆண்டு 100 சதவீத இயற்கை விவசாய திட்டத்தையும் அவர் கொண்டுவந்தார். ஆனால் இதை படிப்படியாக கொண்டு வரலாம் என்று வேளாண் நிபுணர்கள் யோசனை தெரிவித்தபோதும், கோத்தபய ராஜபக்சே அதை ஏற்க மறுத்துவிட்டார்.

இதனால், கனிம உரம், பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. பயிர்களை தாக்கும் வீரியமிக்க நோய்கள் இயற்கை உரங்களுக்கு கட்டுப்படவில்லை.

விளைவு... உணவு உற்பத்தி 50 சதவீதம் என்ற அளவுக்கு பாதியாக குறைந்து, உணவு தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. இயற்கை விவசாயத்தால் தேயிலை உற்பத்தியும் பாதியாக குறைந்து, வெளிநாட்டு ஏற்றுமதி தடைபட்டது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இதுபோன்ற விரும்பத்தகாத காரணங்களால், இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்து போனது. இறக்குமதி பொருளுக்கு அமெரிக்க டாலர்களில் பணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், இலங்கை மத்திய வங்கி, டாலர் கையிருப்பு இல்லை என்று கையை விரித்துவிட்டது. இதனால், வெளிநாடுகளில் இருந்து இலங்கை துறைமுகங்களுக்கு கப்பல்களில் வந்து சேர்ந்த பொருட்களை பணம் கொடுத்து வெளியே எடுக்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற வேதனையான நிலை ஏற்பட்டது.

சரிந்து கிடக்கும் பொருளாதாரத்தை சரிகட்ட இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை. குறைந்துபோன அன்னிய செலாவணி கையிருப்பை சரிகட்ட, அந்நாட்டு பண மதிப்பை இலங்கை மத்திய வங்கி குறைத்தது. இதனால், டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200-ல் இருந்து 330 ஆக குறைந்து போனது.

என்றாலும், பலன் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், பெட்ரோல், டீசல் விலையை இலங்கை அரசாங்கம் உயர்த்தியது. இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக எகிறியது.

விலைவாசி உயர்வு

12.5 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,470-ல் இருந்து ரூ.4199 ஆக அதிரடியாக உயர்ந்தது. இதேபோல், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.137-ல் இருந்து ரூ.254 ஆகவும், டீசல் விலை ரூ.104-ல் இருந்து ரூ.176 ஆகவும், ஒரு கிலோ பருப்பு ரூ.109-ல் இருந்து ரூ.425 ஆகவும் விலை அதிகரித்தது.

மேலும், ரொட்டி (பிரெட்) ரூ.130 ஆகவும், மஞ்சள் ஒரு கிலோ ரூ.5 ஆயிரமாகவும், சீரகம் ரூ.1,800 ஆகவும், பெருஞ்சீரகம் ரூ.1,500 ஆகவும், டீக்கடைகளில் டீ, காபி விலை ரூ.100 ஆகவும் கூடியது. இப்படி, விலைவாசி உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டது. எங்கும் வரிசை, வன்முறை என்ற நிலையே காணப்பட்டது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, நேரடியாக 17.5 சதவீதமும், மறைமுகமாக 50 சதவீதமும் அதிகரித்துள்ளது.

கடும் விலைவாசி உயர்வை தாங்கிக்கொள்ள முடியாத மக்கள், பசியும், பட்டினியுடன் கிளர்ந்து எழுந்து, வீதிக்கு வந்து, இலங்கை அரசை எதிர்த்து போராடத் தொடங்கிவிட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவையும் பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகிந்த ராஜபக்சேவின் சொகுசு வீட்டை சூறையாடியதுடன் வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர். இலங்கையில் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும்போதும், போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது, எல்லையில் நின்ற ராணுவ வீரர்களும், போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈழத் தமிழர்களின் நிலை என்ன?

இலங்கையில் வாழும் சிங்களர்களின் நிலை இவ்வாறாக இருக்கும்போது, ஈழத்தமிழர்களின் நிலை இதைவிட மோசமாக இருக்குமோ? என்று அஞ்சப்படுகிறது. ஆனால், எப்போதுமே கஷ்டத்தையே சந்தித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு, தற்போதைய நிலை கூடுதலாக ஒரு கஷ்டமாகத்தான் பார்க்கப்படுகிறது.

இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் விறகு அடுப்பைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது அவர்களை பாதிக்கவில்லை என்றாலும், உணவு பொருட்களின் விலை உயர்வு அவர்களையும் நிலைகுலையச் செய்துள்ளது. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழர்கள்தான், வேலையின்றி, உணவின்றி தவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இலங்கையில் 1971-ம் ஆண்டு நடந்த ஜே.வி.பி. கிளர்ச்சி மற்றும் உள்நாட்டு பிரச்சினையின்போது, அங்கு கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களும் போராட்ட களத்தில் குதித்தனர். இப்போது, 51 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதேநிலை திரும்பியுள்ளது.

பல்முனை தாக்குதலை சமாளிப்பாரா?

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், நேற்று முன்தினம் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே 6-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். அவரது தலைமையிலான 15 பேர் கொண்ட புதிய மந்திரி சபையும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது.

பொதுவாக, ரணில் விக்ரமசிங்கே அண்டை நாடான இந்தியாவுடன் எப்போதும் நட்பு பாராட்டியே வந்திருக்கிறார். எனவே, இதுபோன்ற இக்கட்டான நிலையிலும் அதே நட்புடன் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.

ஆனாலும், இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவியை விட்டு விலகும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். எனவே, இதுபோன்ற பல்முனை தாக்குதலை எப்படி ரணில் விக்ரமசிங்கே எதிர்கொள்ளப்போகிறார்?, விலைவாசியை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?, அனுபவம் அவருக்கு கைகொடுக்குமா? என்பது போக போகத்தான் தெரியும்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்