ஸ்ரீவைகுண்டம்,
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றது. இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பாலான ஆயுதங்கள், அணிகலன்கள் போன்றவற்றின் மூலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர் என்பது உலகுக்கு பறைசாற்றப்பட்டது.
தொடர்ந்து ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசு சார்பில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் தொல்லியல் துறையினர் நில அளவீடு செய்து, ரேடார் கருவி மூலம், தரையின் அடியில் உள்ள பொருட்களை கண்டறிந்தனர்.
இந்த நிலையில் சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், தொல்லியல் துறை அலுவலர்கள் லோகநாதன், பாஸ்கரன், பிரபாகரன், தங்கத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியான புளியங்குளத்தில் உள்ள முதுமக்கள்தாழி தகவல் மைய கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும்போது கிடைக்கப்பெறும் பழங்கால அரியவகை பொருட்களை தற்காலிகமாக அந்த கட்டிடத்தில் பாதுகாப்பாக வைப்பதற்கும், அந்த கட்டிட வளாகத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஆலோசனை நடத்தினர்.
கருங்குளம் யூனியன் ஆணையாளர் சுப்புலட்சுமி, யூனியன் தலைவி கோமதி ராஜேந்திரன், பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.