செய்திகள்

திரிசூலம் அருகே ரெயிலில் மின்சார கருவி பழுதானதால், தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை பாதிப்பு

திரிசூலம் அருகே மின்சார ரெயிலில் உள்ள மின்சார ‘பேண்டோ கிராப்’ கருவி பழுதானதால் தாம்பரம்-கடற்கரை இடையே சுமார் 1½ மணிநேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

தினத்தந்தி

ரெயில் சேவை பாதிப்பு

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி நேற்று காலை மின்சார ரெயில் வந்தது. திரிசூலம்-மீனம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை 6.15 மணியளவில் வந்தபோது மின்சார ரெயிலின் மேலே உள்ள மின்சார பேண்டோ கிராப் கருவி திடீரென பழுதானது. இதனால் மேலே செல்லும், உயர்மின்னழுத்த கம்பியில் அந்த கருவி உரசாததால் மின்சார ரெயிலை மேற்கொண்டு இயக்க முடியாமல் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

இதற்கு பின்னால் செங்கல்பட்டு மற்றும் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பயணிகள் அவதி

பின்னர் பரங்கிமலை, தாம்பரம் ரெயில் நிலையங்களில் இருந்து வந்த ரெயில்வே என்ஜினீயர்கள் குழுவினர், பேண்டோ கிராப் கருவியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டது. அதன்பிறகு தாம்பரம்-கடற்கரை இடையே மீண்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

அதிகாலை நேரம் என்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்