தமிழக செய்திகள்

ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.180-க்கு விற்பனை; 2 மாதத்துக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை என தகவல்

ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.180-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 2 மாதத்துக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை என்று வியாபாரிகள் சங்க ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சுவை கூட்டும் காய்கறியாக சாப்பாட்டு வகைகளில் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. சாம்பார் வெங்காயத்தில் மருத்துவ குணம் அதிகமாக இருப்பதால் அதற்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. வெங்காயம் விலை விண்ணை நோக்கி செல்லும் ராக்கெட் போன்று உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் அனைத்து தரப்பினரிடமும் மிகப்பெரிய விவாத பொருளாக தற்போது வெங்காயம் உருவெடுத்திருக்கிறது.

விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காய பச்சடி உள்பட வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மசாலா வடை, வெங்காய வடை உள்ளிட்டவற்றில் வெங்காயத்தோடு, முட்டைகோஸ் சேர்க்கப்படுவதாக உணவு பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதேபோல வெங்காய சமோசாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, அதற்கு பதிலாக வியாபாரிகள் உருளை கிழங்கு சமோசாக்களை ஓட்டல், டீ கடைகளில் விற்பனை செய்யப்படுவதையும் பார்க்க முடிகிறது.

சென்னை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ நாசிக் பல்லாரி வெங்காயம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல சாம்பார் வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது சில்லரை விற்பனை கடைகளில் ரூ.180 வரையிலும் விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

பல்லாரி வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வெங்காயம் விலை குறைவதை எதிர்நோக்கி அவர்கள் காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து கோயம்பேடு மொத்த மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சாம்பார் வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. நாள்தோறும் சராசரியாக 10 லாரிகளில் சாம்பார் வெங்காயம் கொண்டுவரப்படும். ஆனால் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாம்பார் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்போது 5 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம். சாம்பார் வெங்காயத்தின் விளைச்சல் இன்னும் 2 மாதத்துக்கு (பிப்ரவரி மாதம்) பின்னர் தான் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பல்லாரி வெங்காயத்தின் விலை பொங்கல் பண்டிகைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி