சென்னை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த 24ந்தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.
இதனை அடுத்து, நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதற்காக, வதந்தி பரப்பியவர்கள் என நேற்றுவரை 14 ஆயிரத்து 815 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், அவசர பயணம் மேற்கொள்வோருக்காக கடந்த 28ந்தேதி சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்ணை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.
சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல நேற்று சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என சென்னை மாநகர காவல் துறை தெரிவித்து இருந்தது.
இதனையடுத்து, தமிழகத்தில் அவசர தேவைக்கான பயணத்துக்கு 8 ஆயிரம் பேர் இதுவரை விண்ணப்பம் அளித்து உள்ளனர் என்றும் அவர்களில் 111 பேரின் வெளியூர் பயணத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
இதுபற்றி சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் வெளியூர் செல்வது தொடர்பாக உண்மை தன்மை விசாரிக்கப்படும். பொது மக்கள் வசதிக்காக, விண்ணப்பம் செய்வது எளிமைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.