சென்னை,
தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இல்லையென்று சொன்னாலும் சரி, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற, மக்களைப் பற்றி கவலைப்படுகிற ஒரு கட்சிதான் தி.மு.க. என்பதாகும். அதனால்தான் தொடர்ந்து வெற்றியை நாம் இன்றைக்கு பெற்று வருகிறோம்.
நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித்தந்தார்கள். அதற்கு பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 6-வது முறையாக நம்முடைய தி.மு.க. ஆட்சியை உருவாக்கித் தருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள்.
தொடர்ந்து வெற்றியை பெறுவதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப்போகிறோம் என்று வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை தந்தோம்.
100-க்கு 99 சதவீதம் இதுவரையில் நாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். மீதம் இருக்கிற 1 சதவீதம் வருகிற 15-ந் தேதி நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றக்கூடிய திட்டமாகத்தான் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்" நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதையும் நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
40-க்கு 40 தான்
காஞ்சீபுரத்தில், அந்த திட்டத்தை நான் தான் தொடங்கி வைக்கப்போகிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், நம்முடைய அமைச்சர்கள் கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்கள். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அந்த தொகையை வழங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறோம். மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படயிருக்கிறது.
எப்படி தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை நீங்கள் எல்லாம் உருவாக்கி தந்தீர்களோ, அதேபோல வர இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் குறித்த நேரத்தில் வரப்போகிறதா அல்லது அதற்கு முன்பே வந்துவிடுமா என்ற ஒரு எண்ணம், சந்தேகம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது.
முன்கூட்டியே தேர்தல் வந்தாலும், அதில் நாம் தான் 40-க்கு 40, புதுச்சேரியை சேர்த்து வெற்றி பெறப்போகிறோம். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. "இந்தியா" கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவை நாம் காப்பாற்ற முடியும்.
தமிழ் பெயர் சூட்டுங்கள்
இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, ஒரே ஒரு வேண்டுகோள் தான். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் எந்த குழந்தையாக இருந்தாலும், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று ஒரு அன்பான வேண்டுகோளை மாத்திரம், உரிமை கலந்த அந்த வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.