தேன்கனிக்கோட்டை,
அஞ்செட்டி அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் கோவிலுக்கு வந்த கர்நாடகாவை சேர்ந்த 5 பெண் பக்தர்கள் பலியானார்கள்.
இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா தாலுகா கொரளாளு சந்திரா கிராமத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் உள்பட 25 பேர் ஒரு டிராக்டரில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவில் உள்ள தப்பகுளி சிவன் கோவிலுக்கு நேற்று வந்து கொண்டு இருந்தனர்.
அஞ்செட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஞ்சுகொண்டப்பள்ளி- தப்பகுளி செல்லும் சாலையில் ஒரு வளைவில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆக்சில் துண்டாகி டிராக்டர் நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் டிராக்டரில் வந்த பக்தர்கள் அனைவரும் கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கினர்.
இதில் டிராக்டரில் சென்ற மஞ்சுநாத் என்பவரின் மனைவி மங்களம்மா (வயது 25), கெஞ்சப்பா மனைவி கவுரம்மா (60), புட்டலிங்கம்மா (60), ஒசபம்மா (80), முள்ளம்மா (80) ஆகிய 5 பண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் மேல்சிகிச்சைக்காக 5 பேர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், 5 பேர் கனகபுரா அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்ற 10 பேருக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அஞ்செட்டி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 5 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.