தமிழக செய்திகள்

தே.ஜ. கூட்டணி கதவை மூடச் சொல்லும் அ.தி.மு.க.. காத்திருக்கும் பா.ஜ.க.!

தற்போதைய பலம் போதாது என்றும், மேலும் சில கட்சிகள் வந்தால் நன்றாக இருக்கும் என்றும் பா.ஜ.க. கருதுகிறது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போதும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தன. இந்த கூட்டணியில், பா.ம.க., த.மா.கா. மற்றும் 6 கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அப்போது, அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பா.ம.க. 23, பா.ஜ.க. 20, த.மா.கா. 6, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

கூட்டணி பேச்சு வார்த்தை

இதில் பா.ம.க. (மாம்பழம்), பா.ஜ.க. (தாமரை) தவிர த.மா.கா. உள்ளிட்ட பிற கட்சிகள் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையிலேயே போட்டியிட்டன. அதாவது, அ.தி.மு.க. 179 தொகுதிகளில் போட்டியிட்டாலும், கூட்டணி கட்சிகளும் 12 தொகுதிகளில் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டதால், மொத்தம் 191 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் களம் கண்டனர்.

இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. புதிதாக இடம் பெற்றுள்ளது. புதிய தமிழகம் உள்பட சில கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

12 தொகுதிகள் குறையும் அபாயம்

தற்போதைய நிலையில், இந்தக் கூட்டணியில் அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 30, பா.ம.க. (அன்புமணி அணி) 18, அ.ம.மு.க. 8, த.மா.கா. 5, இதர கட்சிகள் தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதை வைத்து பார்த்தால், கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட அ.தி.மு.க.வுக்கு 12 தொகுதிகள் குறையும் அபாயம் இருக்கிறது.

மேலும், கூட்டணியில் சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தங்களுக்கான தொகுதிகள் எண்ணிக்கையில் இன்னும் பாதிப்பு ஏற்படுமோ? என்று அ.தி.மு.க. தலைமை கருதுகிறது.

பா.ஜ.க. காத்திருப்பு

எனவே, கூட்டணி கதவை மூடிவிட்டு அடுத்த கட்டமாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்கலாம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைமையை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், பா.ஜ.க. தலைமையோ, வலுவான கூட்டணியுடன் களம் காணும் தி.மு.க.வை எதிர்க்க தற்போதைய பலம் போதாது என்றும், மேலும் சில கட்சிகள் வந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுவதாகவும் தெரிகிறது. இதனால், கூட்டணி கதவை மூடுவோம் என்று அ.தி.மு.க. கூறிவந்தாலும், பா.ஜ.க. தலைமை இன்னும் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்