சென்னை,
மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங் களில் 85 சதவீத இடங்களை அந்தந்த மாநில அரசுகள் நிரப்புகின்றன. இதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது.
மீதம் உள்ள 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங் கப்படுகின்றன. இந்த இடங்கள் இடஒதுக்கீடு முறை இல்லாமல் பிற மாநில மாணவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றன.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகத்தில் வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் மற்றும் தமிழக அரசும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் 34 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரி அந்த மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வகையில் மொத்தம் 13 வழக்குகள் தனித்தனியாக தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை எல்லாம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் மூத்த வக்கீல் பி.ரகுராமன், தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ஏ.தியாகராஜன், வக்கீல்கள் கே.பாலு, பிரியாகுமார், ஸ்டாலின், அபிமன்யூ, ராவணன், சாய்குமார், தினேஷ்குமார் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வழக்குக்கு பதில் அளித்த மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும், அகில இந்திய மருத்துவ படிப்புக்கான இடங்களில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி (மதிப்பெண்) தகுதி அடிப்படையில் இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம்கோர்ட்டு அனுமதி இல்லாமல் இடஒதுக்கீட்டு முறையை மாற்ற முடியாது என்று கூறியது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி. வில்சன் வாதாடுகையில் கூறியதாவது:-
இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும். இந்திய மருத்துவ கவுன்சில் என்பது நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டும்தான். மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது.
மேலும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி எனக்கு அனுப்பிய கடிதத்தில், மாநில அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறி உள்ளார். எனவே, தமிழகத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையின்படி, அகில இந்திய மருத்துவ இடங்களை நிரப்பவேண்டும். இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் வாதாடுகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட விதிகளை வகுத்து உள்ளது. இது மாநில அரசு இடங்களுக்கு மட்டுமல்லாமல், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் பொருந்தும் என்றார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதாடுகையில், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதி உள்ளது. (மதிப்பெண்) தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என்று வாதிட்டார். இதேபோல பிறரும் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்கள். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் தரும் மருத்துவ இடங்களை மத்திய அரசு தானாக முன்வந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இட ஒதுக்கீடு குறித்து சுப்ரீம்கோர்ட்டுதான் உத்தரவு பிறப்பிக்கும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது.
கொள்கை முடிவு மட்டுமல்லாமல், 50 சதவீத இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு தெளிவான சட்ட வடிவத்தை கொண்டுவர வேண்டும். சமூக பொருளாதார அடிப்படையில் சரியான, சமமான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.
மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களை பெற்றபோது அவற்றில் மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய கல்வி நிறுவனங்கள் அல்லாத பிற நிறுவனங்களில் ஆட்சேபிக்க முடியாது. அகில இந்திய மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற எந்த ஒரு தடையும் இல்லை.
இடஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எந்த ஒரு தடையும் இல்லை. மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றப்படக் கூடாது என எந்த விதிகளும் இல்லை. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை மறுக்க முடியாது. சமூக, பொருளாதார ரீதியில் அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் சமமான, சரியான திட்டத்தை கொண்டு வரலாம்.
மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். எனவே இந்த கல்வி ஆண்டில் தற்போது மேற்கொண்டு வரும் நடைமுறையின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தவேண்டும்.
அடுத்த கல்வி ஆண்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விதமாக மத்திய சுகாதார பணிகள் இயக்குனர் ஜெனரல், மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ கவுன்சில், பல் மருத்துவ கவுன்சில் செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, 3 மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.