தமிழக செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டண பாக்கியை குறிப்பிட்டு மாற்று சான்றிதழ்: தமிழக அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும்

தனியார் பள்ளிகளில் கட்டண பாக்கியை குறிப்பிட்டு மாற்று சான்றிதழ் வழங்கும் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு மாறிவிட்டனர். இவ்வாறு மாறிய குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்தின்படி மாற்று சான்றிதழ்களை சமர்ப்பிக்க தேவையில்லை என்று அரசும் அறிவித்தது.இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், மாணவ-மாணவிகள் செலுத்த வேண்டிய கட்டண பாக்கியை மாற்றுச்சான்றிதழில் குறிப்பிட வேண்டும் என்ற தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மாற்று சான்றிதழில் கட்டண பாக்கி

இதன்படி கல்வி கட்டணத்தை செலுத்தி இருந்தால் கல்வி கட்டணம் செலுத்தப்பட்டு விட்டது என்றும், கல்வி கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால், எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமோ அதை குறிப்பிட்டு மாற்று சான்றிதழை வழங்கலாம் என்ற சூழ்நிலையும், இதை அடிப்படையாக வைத்து, கல்வி கட்டணத்தை வசூல் செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கலாம் என்ற சூழ்நிலையும் தற்போது உருவாகி இருக்கிறது.

இது மாணவ-மாணவிகள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதோடு, அவர்களை அவமானப்படுத்துவது போலும் இருக்கிறது. மேலும் மற்ற மாணவர்கள் மத்தியில் அவமதிப்பையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தும். இதுகுறித்து கருத்து தெரிவித்த யுனிசெப் அமைப்பில் பணியாற்றிய கல்வி நிபுணர் கூறுகையில், இது பெற்றோர் செய்த தவறுக்கு பிள்ளைகளை தண்டிப்பது போன்றது. கல்வி நிறுவனங்களை நடத்துவது மற்ற வியாபாரங்களை போன்றது அல்ல. இதுபோன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி நீதிமன்றத்திற்கு பள்ளிகள் சென்றிருப்பது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்து இருக்கிறார். இதற்கு தீர்வு காண வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு நிச்சயம் உண்டு.

மேல்முறையீடு

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து பள்ளிகளும் நேரடி வகுப்புகளை நடத்தாதன் காரணமாக பள்ளிகளின் செலவு வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், பெரும்பாலான பள்ளிகள் கல்வி கட்டணத்தை குறைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டு, ஏழை-எளிய மாணவர்கள் நலன் கருதி இதுகுறித்து மேல்முறையீடு செய்து குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இழுக்கை நீக்க தமிழ்நாடு அரக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மாற்று சான்றிதழில் மாணவ-மாணவிகளின் கட்டண பாக்கி குறிப்பிடப்பட வேண்டும் என்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்து, அவர்கள் மீது சுமத்தப்பட்ட இழுக்கை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்