சென்னை,
சேலம், நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் "அம்மா மினி கிளினிக்" என்ற பெயர் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்த பெயர் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது? என்பதை ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்றத்தை தருவோம் என்று கூறிவிட்டு தேர்தல் முடிவுகள் வெளிவந்த இரண்டாவது நாளே முகப்பேர் பகுதியில் அம்மா உணவகம் சூறையாடப்பட்டது. சில நாட்களுக்கு முன் மதுரையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் திடீரென மறைந்த முன்னாள் திமுக தலைவர் படத்தை ஒட்டியது என்ற வரிசையில் இப்போது சேலத்தில் அம்மா மினி கிளினிக் பெயரை மாற்றியது என ஏமாற்றத்தை தரும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது.
சேலம் மாவட்டம் நவப்பட்டி ஊராட்சி பொதுச் சேவை மையத்தில் இயங்கும் அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை எடுத்துவிட்டு முதலமைச்சர் மினி கிளினிக் என்ற பெயர் பலகை வைத்ததோடு அதில் தற்போதைய முதல்-அமைச்சர் மற்றும் மறைந்த திமுக தலைவர் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ அதிகாரியிடம் விசாரித்தபோது அரசு விதியை மீறி வைத்துள்ள பெயர் பலகையை அகற்றக் கோரி ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நவப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவரை தொடர்புகொண்டபோது அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றி முதலமைச்சர் மினி கிளினிக் என்ற பெயர்ப் பலகையை திமுகவினர் வைத்துள்ளதாகவும், இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
பெயர் பலகை மாற்றப்பட்டு நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டும், பெயர் பலகையை மாற்றவோ, பெயர் பலகையை மாற்றியவர்கள் மீது நடவடிக்கைவோ எடுக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
அரசு ஆணை இல்லாமல், துறை தொடர்புடைய அதிகாரிகள் இசைவு இல்லாமல் எந்த அடிப்படையில் பெயர் மாற்றப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும். அரசு அலுவலகத்தில் பெயர் பலகைகளை எந்த ஆணையும் இல்லாமல், அதிகாரிகள் இசைவும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்றால் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பது பொருள்.
பெயர் பலகையை மாற்றியவர்கள் யார் என்பதை ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாவின் திருவுருவப் படத்துடன் கூடிய அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை மீண்டும் அங்கு பொருத்தப்பட வேண்டும். இதில் தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்கவும், அம்மா படத்துடன் பெயர்ப்பலகை பொருத்தவும் ஆவண செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.