தமிழக செய்திகள்

வங்கியில் கொள்ளை முயற்சி கல்லூரி மாணவரை துண்டால் மடக்கி பிடித்த முதியவர்

தாராபுரம் அருகே வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவரை துண்டால் மடக்கி பிடித்த முதியவருக்கு பாராட்டு குவிகிறது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் கனரா வங்கி உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் வங்கி செயல்பட்டு வந்தது.

பணியாளர்கள் தங்களின் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வாடிக்கையாளர் போல ஒருவர் நுழைந்தார். பர்தா அணிந்திருந்த அந்த நபர் கையுறை, முகமூடி அணிந்து கொண்டு அடையாளத்தை மறைத்து பணியாளர்களை மிரட்ட தொடங்கினார்.

மடக்கி பிடித்த முதியவர்

இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செய்வது அறியாமல் திகைத்தனர். இந்த நிலையில் வங்கிக்கு வந்திருந்த முதியவர் ஒருவர் தான் வைத்திருந்த துண்டை எடுத்து கொள்ளையனின் கழுத்தில் போட்டு மடக்கினார்.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கொள்ளையனை வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் ஒன்று சேர்ந்து பிடித்தனர்.

கல்லூரி மாணவர் கைது

அவரிடம் விசாரித்தபோது அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ் (வயது 19) என்பதும், வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பர்தா அணிந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

வாடிக்கையாளர்கள் தாக்கியதில் காயம் அடைந்த சுரேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சினிமா பார்த்து குடும்ப வறுமையை போக்க கொள்ளையடிக்க திட்டமிட்டதாக அவர் போலீசிடம் தெரிவித்து உள்ளார்.

முதியவருக்கு பாராட்டு

கொள்ளையனை மடக்கி பிடித்தவரின் பெயர் கருணாகரன் (72) என்பதும், அவர் அலங்கியத்தை சேர்ந்தவர் என்பதும் பின்னர் தெரியவந்தது. அவருக்கு பாராட்டு குவிகிறது.

இது குறித்து கருணாகரன் கூறியதாவது:-

பக்கத்து வீட்டு பையன்

எங்களது ஊரில் இப்படிப்பட்ட சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. அப்படி இருந்தும் தனி ஒரு ஆளாக ஒருவன் வந்து கொள்ளையடிக்க முயன்றது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வங்கியில் பணம் எடுப்பதற்காக வந்த நான் வங்கிக்குள் பர்தா அணிந்து வந்த அவனின் செயல் வித்தியாசமாக இருந்தது. அப்போதுதான் அவர் துப்பாக்கி, டைம்பாம் ஆகியவற்றை காட்டி மிரட்ட தொடங்கினான்.

உடனே துணிச்சலுடன் பின்னால் இருந்து அவனை துண்டை போட்டு இழுத்து மடக்கினேன். அப்போது அவன் அணிந்திருந்த பர்தா கழன்றது. இதனால் அவன் சத்தமிட்டதும் இந்த குரல் எங்கேயோ கேட்டது போன்றது உள்ளதே என யோசிக்கும் முன், நான் வசிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பையன் சுரேஷ் என தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். சுரேசுக்கு பெற்றோர் மற்றும் ஒரு தங்கை உள்ளனர். யாரிடமும் சரியாக பழகமாட்டான். இருப்பினும் அவன் செய்தது தவறுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவனை மடக்கி பிடித்த கருணாகரனுக்கு போலீசார், வங்கி பணியாளர்கள், பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி