சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் வார்டு எண். 56, சுங்கம் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பொது வெளியில் மது அருந்திக்கொண்டிருந்த நபர்களை, இங்கு மது அருந்தக்கூடாது என அறிவுறுத்திய அதிமுக வட்டச் செயலாளர் சுரேஷ்குமாரை, நேற்று முன்தினம் (09.02.2026) இரவு 8.30 மணியளவில், கழக அலுவலகத்தில் கழகப் பணிகளை கவனித்து கொண்டிருந்தபோது, 5 நபர்கள் கொண்ட அக்கும்பல் புகுந்து கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வந்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இச்சம்பவத்தில் வட்ட கழக செயலாளர் சுரேஷ்குமார், கோவை மாநகர் மாவட்டப் பாசறை இணைச் செயலாளர் ஈசா டி.செந்தில் ஆகியோர், மற்றும் தடுக்க வந்த பொதுமக்களும் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்திற்குள் புகுந்து, கழகத்தினரைத் தாக்கும் அளவிற்கு குற்றவாளிகள் துணிந்திருப்பதற்கு ஒரே காரணம், இங்கு ஆட்சியில் இருக்கும் சட்டம் ஒழுங்கைக் காக்கத் திராணியற்ற பொம்மை முதல்வரின் கையாலாகாத திமுக அரசு தான்.
குற்றவாளிகளின், போதைப் பேர்வழிகளின் புகலிடமாக, சொர்க்க பூமியாக தமிழகத்தை சீர்குலைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். கழக உடன்பிறப்புகள் மீதும், பொதுமக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.