தமிழக செய்திகள்

திருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி - இரவில் நடந்த பரபரப்பு சம்பவம்

செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சியில் ஈடுபட்ட 3 பேரும் வனத்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

தினத்தந்தி

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே ராஜபாளையம் பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு பம்பு செட்டிற்குள் செம்மரக்கட்டைகளை சிலர் பதுக்கி வைத்து, அங்கு இருந்து அவற்றை வெளி மாநிலத்திற்கு கடத்த இருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரனுக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு 3 பேர் செம்மரக்கட்டைகளை காரில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

வனத்துறையினரை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனடியாக அவர்களை விரட்டி சென்ற வனத்துறையினர் அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில், அவர் திருப்பத்தூர் அருகே கொடுமாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 35) என்பதும், ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து, சேகரின் இடத்தில் வைத்து, அங்கிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் சேகரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 820 கிலோ எடை கொண்ட 29 செம்மரக்கட்டைகளையும், 3 கார்கள், 2 மோட்டார்சைக்கிள்கள், ரம்பம், அரிவாள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்