தமிழக செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆத்தூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை-ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியான இடத்திலும் ஆய்வு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆத்தூரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியான இடத்திலும் ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

ஆத்தூர்:

கோடநாடு கொலை, கொள்ளை

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ளது. அங்கு கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

5 தனிப்படைகள்

இது குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த வழக்கை பொறுத்தவரை இதுவரை 316 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட, 10 பேர் தவிர, வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஆத்தூரில் விசாரணை

இந்தநிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் 316 பேரிடம் நடத்திய விசாரணையில் பெற்ற வாக்குமூலம் மற்றும் 3,600 பக்க குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழுவினர் 2 வாகனங்களில் நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூர் வந்தனர். ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் சிக்கிய ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை சந்தனகிரி பிரிவு ரோடு பகுதியை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணை தீவிரம்

அப்போது, கார் டிரைவர் கனகராஜ் ஆத்தூர் புறவழிச் சாலையில் எங்கிருந்து எந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்?. ஆத்தூர் நகராட்சி 2-வது வார்டு வடக்கு காடு சக்திநகர் பகுதியில் உள்ள அவருடைய பெரியம்மா சரஸ்வதி வீட்டுக்கு கனகராஜ் அடிக்கடி வந்து செல்வாரா? கனகராஜ் விபத்தில் சிக்கிய பகுதி அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியா? அவர் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்தவர்கள் யார்? மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மது அருந்தி இருந்தாரா? அவர் இறந்தது விபத்திலா? அல்லது விபத்து ஏற்படுத்தப்பட்டு இறந்தாரா? உள்ளிட்டவை குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கடைக்காரரிடமும் விசாரணை நடத்தினர்.

மேலும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையின் போது கிடைத்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர். கனகராஜ் இறந்தது தொடர்பாக ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் வாங்கி சென்றனர். கனகராஜ் இறந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதால் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கனகராஜ் மர்ம மரண வழக்கு சூடுபிடித்துள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்