சென்னை,
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது.
இதில் நிலவின் தென்துருவமுனை பகுதியில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் முதல் முறையாக ரோவர் வாகனம் ஒன்றும் இணைக்கப்படுகிறது. அந்த பகுதியில் இதுவரை எந்தவொரு நாடும் ஆய்வு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைகோள் தனது தொடர்பை இழந்ததால், சந்திரயான்-2 திட்டம் அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நவம்பர் மாதத்துக்கு தள்ளிப்போடப்பட்டது.
ஆனால் சந்திரயான்-2 விண்கலத்தில் சோதனைகள் இறுதி செய்யப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நவம்பர் மாதத்திலும் விண்ணில் செலுத்த முடியவில்லை. பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதத்துக்கும், அதைத்தொடர்ந்து இந்த மாதத்துக்குமாக (ஏப்ரல்) பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.
தற்போது ஏப்ரல் மாதம் முடிவடைய இருக்கும் நிலையில் சந்திரயான்-2 திட்டம் ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
சந்திரயான்-2 விண்கலத்தை மிகவும் எச்சரிக்கையாக விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. ஏனென்றால் சந்திரயான்-1, மங்கள்யான் ஆகியவற்றுக்கு பிறகு இந்த திட்டம் இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான திட்டமாகும். எனவே, இதில் இஸ்ரோ எந்த அவசரமும் காட்டவில்லை.
சந்திரயான்-2 விண்கலத்தை இந்த மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலின் பெர்சேஷெட் விண்கலம் நிலவின் நிலப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியுற்ற நாடாக இருந்தபோதிலும், இந்த திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
எனவே நம்முடைய திட்டம் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதனால்தான் சந்திரயான்-2 விண்கலத்தை மீண்டும் ஒரு முறை மறு ஆய்வு செய்ய தேசிய அளவிலான குழுவினர் முடிவு செய்து உள்ளனர். இதற்காக கூடுதலான சோதனைகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. எனவே சந்திரயான்-2 விண்கலத்தை ஜூலை மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
ஆனால், சந்திரயான்-2 விண்கலத்தில் இணைக்கப்பட்டு உள்ள ரோவர் ஆய்வு வாகனம் சேதமடைந்ததால்தான் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இந்த தகவலை விஞ்ஞானிகள் மறுத்து உள்ளனர்.