சென்னை,
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்த பின் அக்டோபர் மாதம் 5ம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து தனது மதிப்பெண் குறைத்து வெளியிடப்பட்டதாக கோவையை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட தரவுகள் மற்றும் அக்டோபர் 11, 12ம் தேதிகளில் 594 மதிப்பெண்கள் என காட்டிய புகைப்படத்தையும் மாணவர் தரப்பில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணை திரிக்க முடியும் என வாதத்திற்காக கூறினால், எண்ணற்ற மாணவர்கள் இதை செய்திருக்க கூடும், தேசிய தேர்வு முகமையின் குளறுபடியால் மாணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியதுடன், இது நீட் தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தர விட வேண்டும் என்றார். ஆனால், அதற்கு ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், அதுபோல புலனாய்வு குழு அமைக்கப்பட்டால், தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமும் தன் பங்குக்கு அவர்கள் பிரதிநிதிகளை நியமிக்க கோருவார்கள் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்றும், ஓஎம்ஆர் விடைத்தாள் ரசாயண முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதனை திருத்தம் செய்யவோ, ஏற்கனவே எழுதிவற்றை அழிக்கவோ முடியாது என்றும் கூறப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, போலி நீட் சான்றிதழ் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக யார் மீதும் வழக்கு பதிவு செய்யாமல் ஆரம்பக்கட்ட விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும், சைபர் கிரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை கொண்ட குழு விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணை அறிக்கை 3 மாதத்திற்குள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.