சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை குறைக்கும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
சட்டத்திருத்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிக் காலம் 5 லிருந்து 3 ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய மசோதாவால் 2018ல் அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வான கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிகிறது. மேலும், தனி அலுவலர்களின் பதவி காலமானது 2021 டிசம்பர் 31 ஆம் தேதியன்று முடிவடைவதால், தனி அலுவலர்களின் பதவி காலம் 2022 ஜீன் 30 வரை நீட்டித்து சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, 1983 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டாக குறைப்பதற்கு தற்போது சட்டத்தில் இடமில்லை. அனைத்து கூட்டுறவு சங்கங்களும் தற்போது லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.