கோவை,
கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது கோவை சர்வதேச விமான நிலையம். கொரோனா தொற்று பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தொற்று பரவலுக்கு முன் தினமும் 33 முதல் 35 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில் அதன்பின்னர் மே மாதம் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
ஜூன் மாதத்திற்கு பிறகு அரசு அறிவித்த தளர்வுகள், அதிக மக்கள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொண்டது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. இந்த மாதம் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 23 வரை தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர், செந்தில் வளவன் கூறுகையில், "கோவை சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சீரான முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன.
கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது. இது தவிர கோவையிலிருந்து பெங்களூரு வழியாக அகமதாபாத், சென்னை வழியாக பரோடா, கவுஹாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நாட்களில் விமானங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்கிறோம் என்று தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 321 ஆக உயர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்தும் 760 டன்னாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.