சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், குடும்பம் ஒன்றிற்கு ரூ.2,500 ரொக்கத்துடன், சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருவதாகவும், ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாகவே மக்களுக்கு, பொங்கல் பரிசு டோக்கன் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் ரூ.2,500 பொங்கல் பரிசு டோக்கனை ஆளுங்கட்சியினர் விநியோகிப்பதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக எம்.பி.ஆர்.எஸ்.பாரதி அளித்திருந்த மனுவில், ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்களே தர வேண்டும் ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால் பரிசுத் தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காது. பரிசு தொகை டோக்கனில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது தவறானது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இதனை அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.