ஓசூர்,
கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க கோரி நேற்று ஓசூரில் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர்- ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-
தமிழகம் ஏற்கனவே தண்ணீர் இன்றி வறண்ட பூமியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகம் நிச்சயமாக பாலைவனமாக மாறிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
எச்சரிக்கை
காவிரியை நம்பித்தான் தமிழ்நாடு உள்ளது. இந்தியாவிற்கே சோறு போடும் பூமியாக தஞ்சை திகழ்கிறது. அந்த தஞ்சைக்கே தண்ணீர் வரவில்லை என்றால், விவசாயமே மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்.
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, யார் தடுத்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று சவால் விடுகிறார். அவருக்கு தமிழக மக்கள் சார்பில் ஒரு வேண்டுகோளை எச்சரிக்கையாக விடுக்கிறோம். நாங்கள் தமிழக-கர்நாடக எல்லை வரை வந்துவிட்டோம். ஒட்டுமொத்த சக்தியை திரட்டி, கர்நாடகவிற்குள் நுழைவதற்கு நீண்ட நேரம் ஆகாது. ஆனால், நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ்ந்து வருகிறோம்.
நாங்கள் தடுப்போம்
கர்நாடக அரசே, தமிழக மக்கள் காந்தியாக இருக்க வேண்டுமா? அல்லது சுபாஷ் சந்திரபோஸ் ஆக மாற வேண்டுமா?. மேகதாதுவில் நீங்கள் ஒரு செங்கல் கூட வைக்க முடியாத அளவிற்கு நாங்கள் தடுப்போம். காவிரி நமது அன்னை. நமது உரிமை, அதனை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ஓசூர் போக்குவரத்து பணிமனை அருகிலிருந்து பிரேமலதா விஜயகாந்த் டிராக்டர் ஓட்டிக்கொண்டு, ஆர்ப்பாட்ட மேடை வரை வந்தார்.