கும்பகோணம்,
தஞ்சை அருளானந்த நகர் 7-வது குறுக்கு தெருவை சேர்ந்த சாமியப்பன் என்பவரின் வங்கி லாக்கரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகத லிங்கத்தை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் அண்மையில் மீட்டனர்.
இந்தநிலையில் மீட்கப்பட்ட மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் குழுவினர் நேற்று மாலை சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் கோர்ட்டில் கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் ஒப்படைத்தனர்.
மரகத லிங்கத்தை ஆய்வு செய்த நீதிபதி சண்முகப்பிரியா, போலீசார் கொடுத்த தகவலின்படி மரகத லிங்கம் குறித்த விவரங்களை சரிபார்த்து அதனை கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் செயல்பட்டு வரும் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார்.