தமிழக செய்திகள்

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கைக்கு தடை கேட்டு வழக்கு - மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடைகேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், மீனவர் தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துதல், புதிதாக தொழிற்சாலைகள் தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்காக சில கட்டுப்பாடுகள், தடைகள் விதிப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு சட்டத்திருத்த அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்டது.

அதில், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 60 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவும் இந்த வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் அரசிதழில் கடந்த ஏப்ரல் 11-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது. மாநில மொழிகளில் வெளியிடவில்லை.

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் இந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் குறிப்பாக தமிழக மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு

கொரோனா வைரசால் தினமும் பலர் இறந்து கொண்டிருக்கும்போது, பொதுமக்கள் தங்களது பாதுகாப்பு குறித்து மட்டுமே நினைப்பார்கள். இதுதொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அரசியல் அமைப்பு சட்டம், 8-வது அட்டவணையில் உள்ள நாட்டில் அதிகம் பேசப்படும் மொழிகளில் வரைவு சட்டத்தை மொழிபெயர்க்க வேண்டும்.

மக்கள் கருத்து கூற கடைசி நாள் ஆகஸ்டு 11-ந்தேதி என்று உத்தரவிட்டது. ஆனால், தமிழ் உள்ளிட்ட நாட்டில் அதிகம் பேர் பேசும் மொழிகளில் இதுவரை மத்திய அரசு மொழி பெயர்க்கவில்லை. இதனால், அதிக நுட்பமான கருத்துக்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ள இந்த வரைவு சட்டத்திருத்தம் குறித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்களால் புரிந்துகொள்ள முடியாது.

அவர்களால் இந்த சட்டம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்க இயலாது. எனவே, கருத்து தெரிவிக்கும் கடைசி நாள் ஆகஸ்டு 11-ந்தேதி என்பதை நீட்டிக்க வேண்டும்.

தடை வேண்டும்

இந்த வரைவு அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க உத்தரவிட வேண்டும். மார்ச் 23-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு சட்ட அறிக்கை குறித்த அறிவிப்பின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மனுதாரர் கடைசி நேரத்தில் இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், கன்னட மொழியில் இந்த சட்ட வரைவு அறிக்கை மொழி பெயர்க்கவில்லை என்பதால், இந்த வரைவு அறிக்கைக்கு கர்நாடக மாநில ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால், மத்திய அரசு மொழிபெயர்க் காமல் உள்ளது என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம். அதற்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?