கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் கஜா புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மரங்கள் ஒடிந்து நாசமானது. மரங்கள் விழுந்ததில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால் கிராமங் கள் இருளில் மூழ்கி உள்ளன.
இவற்றை கணக்கெடுத்து சீரமைக்க அதிகாரிகள் வராததால் 10-க்கும் மேற்பட்ட இடங் களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கீரமங்கலத்தில் சாலை மறியல் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. சாலையிலேயே சமையல் செய்து அங்கேயே சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கொத்தமங்கலம் வழியாக கீரமங்கலம் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் 5 வாகனங்களில் சென்றனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அரசு அதிகாரிகள் மீது கல்வீசி தாக்கியதுடன் 5 வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். கல்வீச்சில் போலீஸ் துணை சூப்பிரண்டு அய்யனார் காயம் அடைந்தார்.
இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கொத்தமங்கலத்தில் சாலையில் கூடிநின்ற பொதுமக்களை போலீசார் நேற்று தடியடி நடத்தி கலைத்தனர். அரசு வாகனங்களை தீ வைத்ததாக 100-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவரங்குளம் பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நேற்று வரை வராததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் நடத்தி 2 மணி நேரம் ஆகியும் அதிகாரிகள் வராததால் புயலால் முறிந்து விழுந்த மரங்களை ரோட்டில் போட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அங்கு அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
திருவரங்குளம் அருகே உள்ள பாரதியார்நகரில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர்.
திருவரங்குளத்தை அடுத்த வம்பன்நாலுரோட்டில், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.