சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.
கடந்த 27-5-2021 அன்று நான் எழுதிய கடிதத்தை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். அந்த கடிதத்தில் நான் தமிழ்நாட்டில் தகுதியுள்ள ஆயிரம் மக்கள் தொகைக்கு இவ்வளவு என வழங்கப்படும் தடுப்பூசி டோஸ்களைப் பொறுத்தமட்டில், குறைந்த அளவே வழங்கப்படும் குறைபாடுகளை சரிசெய்யும் வகையில், சிறப்பு ஒதுக்கீடாக தடுப்பூசி மருந்துகளை வழங்குவதற்காக உங்கள் உடனடி தலையீட்டை கோரியிருந்தேன்.
8-7-2021 வரை தமிழ்நாட்டுக்கு 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்காக 29 லட்சத்து 18 ஆயிரத்து 110 தடுப்பூசி மருந்துகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக ஒரு கோடியே 30 லட்சத்து 8 ஆயிரத்து 440 தடுப்பூசி மருந்துகள் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், மாநிலம் முழுவதிலும் உள்ள தடுப்பூசிக் கான பெரும் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது. தடுப்பூசி போட மக்களுக்கு இருந்த தயக்கத்தை ஒழிப்பதிலும், தடுப்பூசி போடுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதிலும் எனது அரசாங்கத்தின் முயற்சிகள் பெற்ற வெற்றியினால் இந்த குறைந்த அளவு தடுப்பூசி டோஸ்கள் எங்களுக்கு போதுமானதாக இல்லை.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு வழக்கில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், சமமான அளவில் தடுப்பூசி மருந்துகளை பகிர்ந்து கொடுப்பதற்காக 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களின் மக்கள்தொகைக்கேற்ப வழங்கப்படுவதாக குறிப்பிட்டு தெரிவித்து இருந்தது.
ஆனால், தமிழ்நாட்டுக்கு மக்கள்தொகைக்கேற்ப தடுப்பூசி கிடைக்காததால், இப்போது தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் மாநிலத்தில் தகுதியுள்ள ஆயிரம் மக்கள்தொகைக்கு 302 தடுப்பூசி டோஸ்கள்தான் வழங்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 533, கர்நாடக மாநிலத்தில் 493, ராஜஸ்தான் மாநிலத்தில் 446 என்ற கணக்கில் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படுவதை ஒப்பிடும்போது எங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி டோஸ்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.
எனவே, நான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தடுப்பூசி ஒதுக்கீட்டில் சமமில்லாத நிலையை சரிசெய்யும் வகையில், நாங்கள் இலக்கு நிர்ணயித்த மக்கள் தொகைக்கு குறுகிய காலத்தில் தடுப்பூசி போட்டு முடிக்க ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க நீங் கள் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.