சென்னை,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் முதுகெலும்பு என சொல்லப்படும் கிராமங்களில் விவசாயி தற்கொலை செய்து கொண்டு இருக்கும்போது அதை தடுக்க வழிசெய்யாமல் மதத்தின் பெயரால் மக்களை பிரிப்பது அரசாங்கத்தின் சூழ்ச்சி. எதிர்கால தூண்களான மாணவர்கள் அரசியல் புரிதலுக்காக கேள்வி கேட்கும்போது கண்ணீர் புகைக்குண்டுகள் எரிவதும், போலீசாரை கொண்டு அடிப்பதும் தான் அரசாங்கத்தின் பதில்.
பெட்ரோல் விலை ரூ.70-ஐ தொட்டபோது குஜராத்தில் கோடிகள் நஷ்டமாகும் என்று கொதித்தவர், ஆளும்போது நாட்டில் பெட்ரோலின் விலை 78 ரூபாய். பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
விலைவாசி விண்ணோக்கி சென்று கொண்டு இருக்கிறது என அனைவரும் கலக்கத்தில் இருக்கும் நேரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கான அவசரம் என்ன? என்ற கேள்விதான் நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கபுள்ளியே.
பாகிஸ்தானின் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை, இலங்கையின் இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை?. கேள்விகளுக்கு விடையளிப்பதை விடுத்து கேள்வி கேட்பவனின் குரலை ஒடுக்கும் வேலைதான் டெல்லியிலும், அசாமிலும் நடக்கிற அரச பயங்கரவாதம்.
மாணவர்கள் மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமையின் மேல் விழும் அடி. கேள்வி கேட்கவே பயப்பட வேண்டும் என்ற எண்ணத்தை எதிர்கால தலைமுறையினரிடம் ஏற்படுத்த விழும் அடி. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக்கொள்வோமோ? என்ற பயத்தில் விழும் அடி.
எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்த சட்டம் என்ற கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை. அதிகாரம் மக்களின் கையில் இருக்கும் வரையில் அது ஜனநாயகம். மக்களுக்கு எதிராக செல்லும் இந்த தனிநாயகத்தை ஒழிக்கும் வரையில் நான் ஓயமாட்டேன். நாமும் ஓயக்கூடாது.
நம் படையோடு மோத வழியில்லாமல் கால்களுக்கு இடையே பாம்புகளை விடுகிறார்கள். பாம்பை கண்டு பயப்படும் படையல்ல இந்த இளைஞர் கூட்டம். சர்வாதிகாரத்துக்கு எதிராக சுதந்திர காற்றை சுவாசிக்க ஜனநாயக ஆற்றில் மூழ்கி தான் எழ வேண்டும். கரம்கோர்த்து இவர்களை தலை முழுகுவோம்.
மாணவர்கள் குரலை எழுப்புவதற்கு உரிமை இருக்கிறது. அவர்கள் போராட்டம் நடத்தியதில் எந்த தவறும் இல்லை. அ.தி.மு.க. குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது, தமிழ் இனத்துக்கும், தேசத்துக்கும் அவர்கள் செய்த துரோகம் ஆகும். இந்த பிரச்சினை கட்சி வரைகோடுகள், சாதி, பால், இனத்தை கடந்தது. இது தேசம் சம்பந்தப்பட்ட விஷயம். அ.தி.மு.க.வினர் வியாபார கட்டாயத்தால் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். அதை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டாம்.
தமிழனுக்கு விருந்தோம்பல் பற்றி சொல்லி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கண்டிப்பாக நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வோம். பிரதமரை நேரடியாக சந்திப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு விட்டேன். இன்னும் அவர் சந்திக்கவில்லை. பிசியாக இருக்கிறார். அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக செல்வோம். அழையாத வீட்டுக்குள் நுழைய மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் கமல்ஹாசனுக்கு காலில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு பிளேட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, நேற்று தான் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஊன்றுகோல் ஊன்றியபடி, நடந்து வந்து, இருக்கையில் அமர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.