திருப்பூர்,
தமிழக சட்டமன்ற முன்னாள் சபாநாயகரும், அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தனபாலுக்கு சொந்தமான வீடு திருப்பூர் அவினாசி ரோடு ராக்கியாபாளையம் சொர்ணபுரி ரிச்லேண்ட் பகுதியில் உள்ளது. அவர் தொகுதி மக்களை சந்திக்க வரும்போது அந்த வீட்டில்தான் தங்குவார்.
மற்ற நேரங்களில் அந்த வீடு பூட்டியே இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் வீட்டின் முன்பக்க கதவை மர்ம ஆசாமிகள் சிலர் உடைத்துள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக தனபால் எம்.எல்.ஏ.வின் மகனான யோகேஸ் தமிழ்செல்வனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் அங்கு விரைந்து சென்று பார்த்துள்ளார்.
நகை-பணம் கொள்ளை
அப்போது அங்கு யாரும் இல்லை. ஆனால் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 2 வெள்ளி குத்து விளக்குகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து யோகேஸ் தமிழ்செல்வன் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் கள். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
4 பேர் கும்பல்
இதில் 4 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.