தமிழக செய்திகள்

‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளில் “மக்களை சந்திக்க பயந்தே ஹெலிகாப்டரில் பயணம்” எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

புயல் பாதித்த பகுதிகளில் மக்களை சந்திக்க பயந்தே ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பெரும் பேரழிவை சந்தித்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும், அவர்கள் அனுபவித்த துயரங்களை பார்க்க வேண்டும் என்ற இரக்க குணம் கூட இல்லாதவராக முதல்-அமைச்சர் இருக்கிறார்.

முதல்-அமைச்சர் எங்கே, எடப்பாடி எங்கே, தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா? என்ற கேள்விகள் கிளம்பிய நிலையில் வேறு வழியில்லாமல் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்த வழி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்.

அமைச்சர்களையும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களையும் பார்த்தாலே மக்கள் விரட்டுகிறார்கள். அதனால் தான் மக்களை சந்திக்க பயந்து ஹெலிகாப்டர் பயணத்தை தேர்ந்தெடுத்தார் முதல்-அமைச்சர். இதைவிட கேவலம் என்ன வேண்டும்?.

மக்களை சந்திக்காமல் குறிப்பிட்ட இடத்தில் சிலரை மட்டும் வரவைத்து நிவாரணப்பொருட்களை வழங்கி உள்ளார். முதல்-அமைச்சர் பயணம் செய்யும் சாலையில் பொதுமக்கள் நடமாட தடை விதித்துள்ளது காவல்துறை. முதல்-அமைச்சருக்கு பல அடுக்கு பாதுகாப்பு தரப்பட்டு உள்ளது. இந்த பாதுகாப்பை தாண்டி சென்று பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை எப்படி வைக்க முடியும்?.

மக்களிடம் நேரில் குறை கேட்பது தான் குறைகேட்பு பயணமாக இருக்க முடியும். ஹெலிகாப்டரில் செல்வது கண் துடைப்பு பயணம் மட்டுமே. இதற்கு முதல்-அமைச்சர் வராமலேயே இருந்திருக்கலாம் என்பது தான் மக்களின் எண்ணம். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமலேயே நிவாரணப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி என்று அறிவித்துள்ளார் முதல்- அமைச்சர்.

பல்லாயிரம் கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் ஆயிரம் கோடியை வைத்து நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவும் அடிப்படை வசதிகளும் தான் செய்து தர முடியும் என்று முதல்-அமைச்சருக்கு தெரியாதா? முகாம்களில் உள்ளவர்கள் 5 ஆயிரத்தை வைத்து என்ன செய்வார்கள்?. ஒரு தென்னை மரத்துக்கு ரூ.1,100 வழங்கலாம் என்று கணக்கிட்ட புத்திசாலி யார்?.

லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்துள்ளன. ஒவ்வொரு மரமும் 30 முதல் 40 ஆண்டுகள் வயதானது. குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரமாவது தந்தாக வேண்டும். மாவட்ட கலெக்டர்கள், வருவாய் துறை அதிகாரிகளிடம் தனித்தனியாக அறிக்கை பெற்று சேத மதிப்பை முழுமையாக அறிந்த பிறகு முழுமையான நிதி அறிவிப்பை செய்ய வேண்டும். மத்திய அரசின் கவனத்துக்கு இதனை கொண்டு செல்ல வேண்டும்.

புயல் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் தங்கி சேதங்களை முழுமையாக உணர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும். அவர்களது கோபத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஒழுங்காக, முறையாக அரசாங்கம், செயல்பட்டால் எதற்காக மக்கள் கோபப்படப் போகிறார்கள்?.

மக்களின் கோபத்தை அதிகப்படுத்தும் வண்ணமாகவே இந்த அரசு அனைத்து காரியங் களையும் செய்கிறது. இதற்கு மக்கள் மன்றத்தில் நிச்சயம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். ஓடி ஒளிந்துகொள்வதால் அதிலிருந்து தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய - மாநில அரசுகளால் முறையான, போதுமான நிவாரணப்பணிகள் சரியாக நடைபெறவில்லை. மத்திய பா.ஜ.க. அரசோ மத்திய பேரழிவு நிதியில் இருந்து நிதி ஒதுக்காமல் இருப்பதும், மத்திய மந்திரிகளோ, அதிகாரிகளோ தமிழகத்தை புறக்கணிக்கிற விதத்தில் இதுவரை கண்டுகொள்ளாமலும், பார்வையிட வராமலும் இருப்பது பெரும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் தொண்டர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டி, சேகரித்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இரு இடங்களில் மட்டும் நிவாரண உதவி வழங்கிவிட்டு திரும்பியிருக்கிறார். கடுமையான சேதமடைந்த பிற பகுதிகளை பார்க்காமல் ஏதோ சுற்றுலாவுக்கு சென்றதை போன்று முதல்-அமைச்சர் திரும்பியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்